திடீரென கொட்டிய கனமழை மிரண்டுபோன சென்னை பதறிய முதல்வர் – காரணம் என்ன?

நேற்று எதிர்பாராதவிதமாகச் சென்னையில் பெருமழை கொட்டித் தீர்த்தது.நண்பகல் தொடங்கிய கனமழை இரவு வரை சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்ததால் சென்னை ஸ்தம்பித்தது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை எம்ஆர்சி நகரில் பெய்த அதிகனமழையால் 21 செ.மீ மழை பதிவானது. சென்னை துங்கம்பாக்கத்தில் 20 செ.மீ மழை பதிவானது. விமான நிலையப் பகுதியான மீனம்பாக்கத்தில் 15 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

இதனால் சென்னை போக்குவரத்து முடங்கியது மட்டுமின்றி நகரம் மொத்தமும் வெள்ளக்காடாக மாறிப்போனது. அதனால் அரைமணி நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆறு மணிநேரம் பயணப்பட வேண்டியிருந்தது. இதனால் சென்னை மக்கள் கடுந்துயரைச் சந்தித்தனர்.பல இடங்களில் பல மணிநேர மின்சாரம் தடைபட்டது.

வானிலை மையங்களால் முன்பே கணிக்க இக்கனமழை நாம் எவ்வளவு பேராபத்தில் இருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு.

வானிலைக் கணிப்புகளையும் மீறிக் கொட்டித் தீர்க்கிறது மழை. எதிர்பாராத மாமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்துடன் பதிவிடுகிறார்.

இதற்குக் காரணம் இயற்கையின் சமத்தன்மை குலைந்ததால் ஏற்படுள்ள காலநிலை மாற்றம் என்பதே சூழலியலாளர்களின் கூற்றாக இருக்கிறது.

சூழலியலாளர் சுந்தரராஜன் இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….

இன்று சென்னையைப் புரட்டிப்போட்ட மழைக்குப் பிறகும் காலநிலை மாற்றத்தை முக்கிய பிரச்சனையாக நாம் எடுத்துக்கொள்ளவில்லை எனில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதில் உள்ள மிகப்பெரிய சவால், எந்த மாதிரிகளும் இதைக் கணிக்கவில்லை என்பதுதான், இது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தன்மையை காட்டுகிறது.
மீண்டும் தமிழக முதல்வரைக் கோருகிறோம், தமிழ்நாட்டில் “காலநிலை அவசரநிலையை” அறிவிக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் உள்ள அனைத்து அனல் மின்நிலையங்களையும் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத் தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

Leave a Response