தர்மபுரி நாம்தமிழர் ஆர்ப்பாட்டத்தில் திமுக அராஜகம் – சீமான் கண்டனம்

தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் அரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றியச் செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி, அரூர் தொகுதி தலைவர் இளையராஜா, தொகுதி செயலாளர் திலீப், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி பசுபதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர்கள் ஹிம்லர், தஞ்சை கரிகாலன் ஆகியோர் பேசினர்.

அப்போது மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செங்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு திரண்டு வந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டு நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் காவல்துறை ஆய்வாளர் வளர்மதி மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள். இதனால் கண்டன ஆர்ப்பாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மொரப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தருமபுரி மாவட்டம், அரூரில் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைகோரி நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் வன்முறைக்கும்பல் அத்துமீறி உள்நுழைந்து, மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதல் நடத்த முற்பட்டதும், அதனைக் காவல்துறையினர் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுகவினரின் இப்போக்கு கோழைத்தனத்தின் உச்சம். வடமாநிலங்களில் பாஜக செய்யும் அதேவகையிலான வன்முறையையும், சனநாயகத்திற்கு எதிரானக் கொடுங்கோல் போக்கையும் ஏவிவிடும் திமுகவினரின் செயல் இழிவானது. அதிகாரத்திமிரிலும், ஆட்சி தந்த மமதையாலும் காவல்துறையைக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது.

நாம் தமிழர் கட்சியின் மேடையை உடைத்து, கட்சியின் நிர்வாகிகள் மீது வன்முறை வெறியாட்டத்தை ஏவிவிட்ட திமுகவினரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response