கிளாஸ்கோ காலநிலை மாநாட்டின் தோல்விக்கு இந்தியாவே முதன்மைக் காரணம் என தமிழ்த்தேசியப் பேரியக்கப்
பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..,
புவி வெப்பமாதலின் விளைவுகள் கண்முன்னே தெரியத் தொடங்கிவிட்டன. எரியும் காடுகள், உயரும் கடல் மட்டம், அதனால் மூழ்கும் தீவு நாடுகள், ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை ஒரு சில மணி நேரத்தில் கொட்டித் தீர்ப்பதால் ஏற்படும் பேரழிவு என்று பல முனைகளில் புவிவெப்பமாதலின் விளைவுகள் தாக்கி வருகின்றன.
வளர்ச்சி வாதம் (Growthism) என்ற பேரழிவுக் கொள்கை எல்லா நாடுகளையும் ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கொள்கையின் விளைவாக, கண்மண் தெரியாத தொழில் வீக்கம் சுற்றுச்சூழலை பெருமளவு அழித்து வருகிறது.
இதுகுறித்து அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், ஆட்சியாளர்கள் மிகத் தாமதமாகவே இதன் மீது அக்கறை செலுத்தத் தொடங்கினர். அதற்கும் காரணம் – சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து கொடுத்த அழுத்தம்தான்!
இந்த விழிப்புணர்வின் முக்கிய விளைவாக ஐ.நா. காலநிலை பாரிசு மாநாடு அமைந்தது. 2015 இறுதியில் நடைபெற்ற பாரிசு காலநிலை மாநாட்டின் முடிவுகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
”இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவிவெப்பமாதலை 2° செல்சியசுக்குக் கீழே நிறுத்த வேண்டும் என்பதை இம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் தங்களது கட்டாயக் கடமையாக ஏற்கின்றன. மேலும் இந்த வெப்ப உயர்வை 1.5° செல்சியசுக்குள் நிறுத்துவதை தங்கள் இலட்சியமாக அறிவிக்கின்றன” என அம்மாநாட்டின் மையத் தீர்மானம் அறிவித்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியான புவிவெப்ப மாதல் குறித்த ஐ.நா. ஆய்வறிக்கைகள் 2100 ஆம் ஆண்டுக்குள் 1.5° செல்சியசுக்குள் வெப்ப உயர்வை நிறுத்துவதுதான் பாதுகாப்பானது என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்தன.
பாரிசு மாநாட்டில் ஒவ்வொடு நாடும் இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு “நாடுகள் தீர்மானிக்கும் பங்களிப்பு” Nationally Determined Contribution – NDC) எனப் பெயர்!
பாரிசு மாநாடு முடிந்து, ஐந்தாண்டுகளில் அனைத்து நாட்டு ஆட்சித் தலைவர்களும் பங்கேற்கும் உச்சி மாநாட்டை நடத்தி, அதில் ஒவ்வொரு நாடும் அறிவித்திருக்கும் பங்களிப்பு எந்தளவுக்கு இலக்கை அடைய பயன்படும் என்பதை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில், கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய இந்த உச்சி மாநாடு கொரோனா பெருந் தொற்று காரணமாக இந்த ஆண்டு (2021) ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.
2021 அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 முடிய என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த உச்சி மாநாடு (Conference of Parties 26 – COP26) பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், COP26 மாநாடு பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது. இம்மாநாட்டிற்கென்று அறிவிக்கப்பட்ட நோக்கங்கள் தோல்வி அடைந்தன.
இம்மாநாட்டின் நோக்கங்களாக மூன்று இலக்குகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
1. நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவளி ஆகிய படிம எரிபொருள்களின் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்வது,
2. ஏற்கெனவே 2009 கோபன்ஹேகன் மாநாட்டில் அறிவித்தவாறு புவிவெப்பமாதலுக்குக் கூடுதல் பொறுப்பான வளர்ச்சியடைந்த நாடுகள், இந்தச் சூழலியல் பேரழிவால் பாதிக்கப்படும் பின்தங்கிய நாடுகளுக்கு வழங்குவதற்காக ஆண்டுதோறும் 100 கோடி டாலர் வழங்குவது,
3. புவிவெப்ப உயர்வால் பேரழிவைச் சந்தித்து வரும் தீவு நாடுகள் உள்ளிட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இந்த நிதியிலிருந்து இழப்பு மற்றும் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவது.
மேற்கண்ட மூன்று நோக்கங்களுமே கிளாஸ்கோ மாநாட்டில் நிறைவேறவில்லை!
இந்தத் தோல்விக்கு அமெரிக்கா, சீனா மட்டுமல்ல – இந்தியாவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த 26 ஆவது உச்சி மாநாட்டின் தலைவர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மா மாநாட்டின் நிறைவுரை ஆற்ற இருந்தபோது, பேச முடியாமல் கண்கலங்கி நின்றார். மாநாட்டின் முடிவு மிகப்பெரிய ஏமாற்றம் என்பதை அவரது கண்ணீர்த் துளிகளே அறிவித்தன.
இம்மாநாட்டில் பங்கேற்ற மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் போன்ற முக்கிய தீவு நாடுகளின் பேராளர்கள், “மிகவும் பாதிக்கப்படும் எங்களைப் போன்ற நாடுகளைக் கேட்காமல் கடைசி நேரத்தில் உலகத்தின் மீது திணிக்கப் பட்ட மோசமான ஒப்பந்தம் இது” என்று ஆவேசக் குரல் எழுப்பினர்.
மாலத்தீவு பேராளர் ஷாகுனா அமீநாத், “1.5° செல்சியசுக்கும் 2° செல்சியசுக்கும் இடையிலுள்ள வேறுபாடு கூட எங்களுக்கு (தீவு நாடுகளுக்கு) விதிக்கப்பட்ட மரண தண்டனையாகும்” என்று கூறினார்.
இம்மாநாட்டுக்கிடையில் பெருந்திரள் பேரணி நடத்திய கிரேட்டா துன்பெர்க், இம்மாநாட்டின் முடிவுகளை “வெற்றுக்கூச்சல்.. வெற்றுக்கூச்சல்.. வெற்றுக்கூச்சல்.. (Blah.. Blah.. Blah..)” என்று அறிவித்தார்.
“புவி காக்கும் கடமை மாநாட்டு அரங்கத்தில் அல்ல – வீதிகளில் இருக்கிறது” என்று சூளுரைத்து, மாநாட்டிற்கு வெளியில் திரண்டிருந்த சூழலியலாளர்கள் கலைந்தார்கள்.
மாநாட்டுக்கு முன்பாக 2021 ஆகத்து 9ஆம் நாள், அனைத்து நாட்டு காலநிலை ஆய்வுக்குழு தனது 6ஆவது மதிப்பீட்டு அறிக்கையை (Assessment Report – AR6) வெளியிட்டது. “காலநிலை மாற்றம் 2021 : இயற்கை அறிவியல் அடிப்படை” (Climate change 2021 : Physical Science Basis) என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை சுற்றுச்சூழலில் நிகழ்ந்துள்ள பல்வேறு சீர்கேடுகளை துல்லியமாக எடுத்துரைக்கிறது.
“கொள்கை வகுப்பாளர்களுக்கான சுருக்க அறிக்கை” (Summary for Policy Makers) என்ற வடிவில், வெளியிடப்பட்டுள்ள சுருக்க அறிக்கை, 2019ஆம் ஆண்டில் காற்றிலுள்ள கரியமல வளி (CO2) அளவு 410 ppm என்ற அளவை எட்டி விட்டது, மீத்தேன் அளவு 1866 ppb என்ற அபாய அளவை எட்டிவிட்டது என்று அறிவிக்கிறது. (A 1.1).
வளி மண்டலத்தில் இருக்க வேண்டிய கார்பன் டை ஆக்சைடின் பாதுகாப்பான அளவு 340லிருந்து 350 ppm ஆகும். இதனை ஒப்பிட இப்போதுள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவு எவ்வளவு அபாயகரமானது என்று புரியும்.
அடுத்து, “புவியின் சராசரி வெப்பநிலை தொழில் புரட்சி ஆண்டுகளான 1850 – 1900 என்ற ஐம்பதாண்டு சராசரியை ஒப்பிட 2010 – 2019 பத்தாண்டுகளில் சராசரியாக 1.07 ° செல்சியஸ் உயர்ந்திருக்கிறது” என்று அறிவிக்கிறது (A 1.3).
பாரிசு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இலட்சிய அளவான 1.5° செல்சியஸ் என்பது எவ்வளவு ஆபத்தில் இருக்கிறது என்பது இதிலிருந்து புரியும்.
அதனால்தான், மாநாட்டின் முடிவை அறிவிக்க எழுந்த உச்ச மாநாட்டின் தலைவர் அலோக் சர்மா, “மாநாட்டின் தீர்மானத்தை அறிவிக்க மிகவும் வேதனைப்படுகிறேன். 1.5° செல்சியஸ் என்ற இலட்சியத்தை உயிரோடு வைத்திருக்கிறோம். ஆனால், அதன் நாடித் துடிப்பு பலவீனமாக இருக்கிறது” என்று அறிவித்தார்.
“புவியின் சராசரி கடல் மட்டம் 2006க்கும் 2018க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் உயர்ந்திருக்கிறது” என்று இந்த அறிக்கை கூறுகிறது. (A 1.7). “வெப்பக் காற்று வீசுவது, காடுகள் எரிவது, எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவது போன்ற தீவிரமான சூழல் குலைவுகள் அடிக்கடியும் தீவிரமான அளவிலும் புதிய புதிய பகுதிகளில் விரிவடைந்தும் நடைபெறுகின்றன” (A 3.5) என்று இந்த அறிக்கை விளக்குகிறது.
சிக்கல்களை விளக்குவதோடு மட்டுமின்றி நாட்டுத் தலைவர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் எந்தெந்த வகையான மாற்றுத் திட்டங்களை எந்தெந்த அளவில் முன்னெடுத்தால், வெப்ப உயர்வை 1.5° செல்சியசுக்குள் நிறுத்த முடியும் என்பதற்கான தெளிவான தணிப்புத் திட்டங்களையும் (Mitigation) இவ்வறிக்கைத் தெளிவாக வலியுறுத்துகிறது.
கிளாஸ்கோ உச்சி மாநாட்டின் முதல் நாளில் பல்வேறு நாடுகளின் அறிவியல் பேராளர்கள் பங்கேற்ற அரங்கில், இந்த ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை (AR6) முன்வைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், இந்தியாவின் சார்பில் பேசிய அறிவியல் பேராளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ட்டி.செயராமன், “தணிப்பு நடவடிக்கைள் குறித்த (Mitigation) அத்தியாயத்தின் சில பகுதிகளை நீக்க வேண்டும். ஆர்டிக் பனிப்பாறைகள் பெருமளவு உருகும் என்ற மதிப்பீட்டை வெளியிடக் கூடாது என இந்தியாவின் சார்பில் வலியுறுத்துகிறோம். பீதியூட்டுவதை விட நம்பிக்கை ஊட்டுவதே நமது கடமையாகும்” என்று பேசினார்.
பதினாராயிரம் ஆய்வறிக்கைககளை ஆய்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல நூறு அறிவியலாளர்கள் பங்கெடுத்து அணியப்படுத்திய ஆய்வறிக்கையாகும் இது! இது அறிவியல் ஆய்வறிஞர்களின் தனி அறிக்கை அல்ல! ஐ.நா.வில் உறுப்பு வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 197 நாடுகளின் அறிவியல் பேராளர்களும், அந்தந்த அரசின் சார்பில் ஏற்பு அளித்த அறிக்கை ஆகும்!
செயராமனின் கருத்திற்கு மறுப்பு விளக்கமளித்த இவ்வாய்வு அறிக்கையை அணியப்படுத்திய குழுவின் இரண்டு தலைவர்களின் ஒருவரான பிரான்சை சேர்ந்த வளேரி மேசன் – டெல்மோட் (Valérie Masson – Delmotte) அம்மையார், “பல்வேறு நிகழ்ச்சிப் போக்கின் வாய்ப்புகளை விளக்கிக் கூறியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றாக, ஆர்டிக் பேரழிவைக் குறிப்பிட்டிருக்கிறோம்” என்று கூறினார்.
ஆயினும், மாநாட்டின் இறுதியில் இந்தியா செய்ய இருந்த மோசமான திருத்தத்தை முன்னறிவிக்கும் குரல் இது என்பதைப் பலரும் கவனிக்கவில்லை.
“கிளாஸ்கோ காலநிலை ஒப்பந்தம்” (Glasgow Climate Pact) கடைசியில் மோசமான முடிவுகளோடு முடிந்தாலும், சில முகாமையான உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒப்பந்தத்தின் பத்தி 25 – (Para 25), “எல்லா நாடுகளும் தாங்களே முன்வந்து அறிவித்த பங்களிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் 2010ஐ ஒப்பிட 2030இல் பசுமைஇல்ல வளிகள் வெளியீடு குறைவதற்குப் பதிலாக 13.7% அதிகரிக்கும்” என்கிறது.
“நாடுகள் முன்வந்து அறிவித்திருக்கும் இந்தப் பங்களிப்புகளில் உள்ள போதாமையை சரி செய்ய 2022க்குள் மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என மாநாடு உறுப்பு நாடுகளை வலியுறுத்துகிறது” (பத்தி 29) என வேண்டுகோள் வைக்கிறது.
இம்மாநாட்டில் இந்தியா 2070 க்குள் நிகர சுழிய கரி உமிழ்வை அடையும் என்று உறுதி கூறியிருக்கிறது.
நிகர சுழியக் கரி உமிழ்வு (Net Zero Emission) என்றால், உமிழப்படும் கரி அளவுக்கு காடு வளர்ப்பு போன்ற கரி உறிஞ்சல் திட்டங்களின் வழியாக வெளியிடும் கரி அந்தந்த நாட்டிலேயே உறிஞ்சிக் கொள்ளப்படும், அதன் வழியாக நிகர சுழியக் கரி உமிழ்வு நடைபெறும் என்று பொருள். அதாவது, உமிழும் அளவும் உறிஞ்சும் அளவும் சமமாக அமைந்து நிகர கரி உமிழ்வு சுழியம் என்ற நிலையை அடையும் என்று பொருள்!
அமெரிக்க ஐக்கிய நாடுகள், நிகர சுழியக் கரி உமிழ்வை 2050ஆம் ஆண்டுக்குள் கொண்டு வருவதாகவும், சௌதி அரேபியா – சீனா ஆகியவை 2060க்குள் கொண்டு வருவதாகவும் அறிவித்திருக்கின்றன.
இதுமட்டுமின்றி, இந்த உச்சி மாநாட்டில் பேசிய இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, 2030க்குள் இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவையில் 50 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க வழிகளில் உருவாக்கப்படும் என அறிவித்தார். ஆயினும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வழி என்பதில் அணுஉலைகளையும் சேர்த்தேதான் குறிப் பிட்டார்.
“இம்மாநாட்டில் ஒவ்வொரு நாடும் அறிவித்திருக்கிற தணிப்பு நடவடிக்கைப் பங்களிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால், 2100ஆம் ஆண்டில் புவி சராசரி வெப்பநிலை 2.4° செல்சியஸ் என்றளவுக்கு உயர்ந்துவிடும்! வளர்ச்சியடைந்த நாடுகள் 2030க்குள்ளும் அனைத்து நாடுகளும் 2040க்குள்ளும் நிலக்கரி – பெட்ரோல் – டீசல் போன்ற படிம எரிபொருள்களை முற்றிலும் கைவிட்டால் தான், 1.5° செல்சியஸ் என்பதைப் பற்றி சிந்திக்கவே முடியும். இப்போதுள்ள பங்களிப்பு வாக்குறுதிகள் பேரழிவைத்தான் ஏற்படுத்தும்” என்கிறது “காலநிலை செயல்பாடுகளைப் பின்தொடர்வோர் குழு” (Climate Action Trackers) என்ற ஆய்வு நிறுவனம்.
கிளாஸ்கோ மாநாட்டில், நிலக்கரி மற்றும் பெட்ரோல், டீசல், எரிவளி பயன்பாட்டை முற்றிலும் கைவிடுவதற்கு முன்மொழிவுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த முன்மொழிவுகளை கடைசி நிமிடத்தில் இந்தியா குடை சாய்த்தது.
இந்த மிகப்பெரிய உயிரான தீர்மானப் பகுதியில் “நிலக்கரி மின்சாரத்தின் செயல்பாடு படிப்படியாக நிறுத்தப்படும்” (Phase Out of Coal Power) என்று முன்வைக்கப்பட்டிருந்தது. மாநாட்டின் பேச்சு வார்த்தைகள் இழுபறியில் நீடித்ததால், நவம்பர் 12ஆம் (தமிழ்நாடு நேரப்படி நவம்பர் 13) நாள் முடிவடைய வேண்டிய இம்மாநாடு – விடிய விடிய அடுத்தநாள் வரை நவம்பர் 13 (தமிழ்நாட்டிற்கு நவம்பர் 14) அன்று முடிவுற்றது.
அந்த இழுபறியான சூழலைப் பயன்படுத்தி, கடைசி நிமிடத்தில் இந்தியா நிலக்கரி மின்சாரத்தைப் படிப்படியாக நிறுத்துவது என்ற இடத்தில், “படிப் படியாகக் குறைப்பது” (Phase down) என்று திருத்தம் செய்தது. இதன் விளைவாக, கிளாஸ்கோ ஒப்பந்தத்தின் முக்கியமான பகுதியான பத்தி 36 (Para 36), “தங்கு தடையின்றித் தொடரும் நிலக்கரி மின்சார உற்பத்தி யையும் படிம எரிபொருள்களுக்கு வழங்கப்படும் திறனற்ற மானியங்களையும் படிப்படியாகக் குறைக்க வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று மாற்றப்பட்டது.
வரைவு ஒப்பந்தத்தில், “நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருள்கள் அனைத்தும் படிப்படியாக நிறுத்தப்படும் (Phase out)” என்பது இருந்தது. சீனாவும் அமெரிக்காவும் தலையிட்டு “பிற படிம எரிபொருள்கள்” (and fossil fuels) என்ற பகுதியை நீக்கிவிட்டன. மீதியிருந்தது நிலக்கரி என்பதுதான். அதையும் இந்தியா நீக்கிவிட்டது!
நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவளி ஆகிய படிம எரிபொருள்கள்தான் கரி உமிழ்விற்கு முதன்மையான காரணிகளாகும்! இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட ஐ.நா. ஆய்வறிக்கைகளும், இப்போது வைக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையும் இந்த உண்மையைத் துல்லியமாகக் கூறுகின்றன. இதற்கு ஒரு கால அட்டவணை வைத்து, ஒவ்வொரு நாடும் படிம எரிபொருள்களை முற்றிலும் நிறுத்துவது என்ற திட்டத்தை முன்வைத்தால்தான் புவிவெப்ப உயர்வை ஒரிடத்தில் தடுத்து நிறுத்த முடியும்.
இதைக் கொள்கையளவில் இந்நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், செயல்படுத்த அணியமாக இல்லை! இந்த மனநிலையின் பின்னணியிலிருந்துதான் முதல்நாள் அறிவியல் பேராளர் மாநாட்டில் – இந்தியப் பேராளர் கூறிய “நம்பிக்கை ஊட்டுவதாக அறிக்கை இருக்க வேண்டும்” என்ற சொல்லாடல்!
புவிவெப்பமாதல் உண்மைதான், ஆயினும் நீங்கள் சொல்லும் வேகத்தில் இல்லை என்று சொல்வது, இதற்குக் காரணமான படிம எரிபொருள்களை – “படிப்படியாக நிறுத்துவது” என்பதற்குப் பதிலாக “படிப்படியாகக் குறைப்பது” என்று சொல்வதற்கான முன் ஏற்பாடாகும்! “படிப்படியாகக் குறைப்பது” என்றால், எவ்வளவு குறைப்பது, எவ்வளவு நாளில் எவ்வளவு குறைப்பது – என்ற எந்தத் தெளிவும் இல்லாத, உண்மையில் இருக்கும் நிலையை நீடிக்கும் சூழ்ச்சியான சொல்லாடலாகும்! இதைத்தான் இந்தியா செய்திருக்கிறது.
மாநாட்டில் நரேந்திர மோடி சொன்ன வாக்குறுதிகளிலிருந்தும், மாநாட்டிற்கு வெளியே வந்து பின் வாங்கினார். “2070 க்குள் நிகர சுழிம கரி வெளியீடு என்று சொன்னதும், 2030 க்குள் இந்தியாவின் ஆற்றல் வழிகளில் 50 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க வழிகளில் இருக்கும் என்றதும் நாங்கள் எங்கள் நாட்டில் மேற்கொண்டிருக்கிற தேசிய முடிவுகளை விளக்குவதே தவிர – உச்சி மாநாட்டிற்கு இந்தியா தந்த வாக்குறுதிகள் அல்ல. ஏனென்றால், வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து குறைந்தது 1 இலட்சம் கோடி டாலர் உதவியாகக் கிடைத்தால்தான், விரைவான மாற்றங்களை எங்களால் கொண்டுவர முடியும்” என்றார் மோடி.
கிளாஸ்கோ COP26 மாநாடு – வெற்றியில் முடிந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், முக்கியமான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என அமெரிக்கப் பேராளர் ஜான் கெர்ரி உள்ளிட்டு பல நாட்டுத் தலைவர்கள் அமைதி சொன்னாலும், புவியின் சராசரி வெப்பநிலையை 1.5° செல்சியசில் நிறுத்துவதற்கு அவசரமான துல்லியமான செயல்திட்டங்கள் தேவை என்பதையே அறிவியல் கோருகிறது! அதனால்தான், பல்வேறு சூழலியல் அமைப்புகள் ஒவ்வொரு நாடும் சூழல் அவசரநிலையை (Climate Emergency) அறிவித்து, அவசரச்சிக்கலாக புவிக் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோருகின்றன.
ஐ.நா.வின் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் ஆற்றிய நிறைவுரை கவனங்கொள்ளத்தக்கது. “போதுமான செயல்திட்டங்களை இம்மாநாடு மேற்கொள்ளவில்லை” என்று அறிவித்த அந்தோனியோ குட்டரஸ், மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கில் குழுமியிருந்த சூழலியல் இயக்கங் களைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களிடம் கீழ்வருமாறு அறிவித்தார்.
“நீங்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். ஆனால், முன்னேற்றத்தின் பாதை நேர் கோட்டில் அமைவதில்லை. சில நேரங்களில் இலட்சியப் பாதையில் அகழிகள் குறுக்கிடக்கூடும். சில நேரங்களில் சுற்றுவழியாக இலட்சியப் பாதை அமைந்துவிடக் கூடும். ஆயினும், நமது இலட்சியத்தை அடைந்துவிட முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாம் உயிர் காக்கும் போராட்டத்திற்கிடையில் நிற்கிறோம். இந்தப் போராட்டம் வெற்றியடைந்தே தீர வேண்டும். போராட் டத்தைக் கைவிடாதீர்கள். போராட்டத்திலிருந்து பின்வாங்காதீர்கள். முன்னோக்கிச் செல்ல அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருங்கள்!” என்றார். இதுதான் உண்மை!
கிளாஸ்கோ மாநாட்டின் தீர்மானம் 2022 நவம்பரில் எகிப்தின் சார்ம் எல் ஷேக் (Sharm el-Sheikh) நகரில் நடக்கவுள்ள COP27 மாநாட்டிலாவது மாற்றுத் திட்டங்களோடு வாருங்கள் என்று உறுப்பு நாடுகளைக் கெஞ்சுவதோடு முடிந்தது! ஆனால், உண்மையான பணிகள் மாநாட்டு அரங்கத்திற்கு வெளியேதான் இருக்கின்றன.
இதுபோன்ற மாநாடுகள் நடக்கிறபோது, உலகின் பல நாடுகளிலிருந்தும் கூடுகிற புவிக் காப்பு செயல்பாட்டாளர்கள் நடத்துகிற போராட்டங்கள் முக்கியமானவைதான். ஆனால், அதைவிட தங்கள் தங்கள் நாடுகளில் அந்தந்த அரசுகளைத் திருத்தும் வகையில் அழுத்தமான போராட்டங்கள் நடத்துவது மிகமுகாமையானது! அதிலும், இந்தியாவிலுள்ள சூழல் அமைப்பினரின் பணி மிகப்பெரியது!
இன்று தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை கூடுதலாகி வரும் காலம்! பாராமுகமாக இருந்த பல்வேறு அரசியல் இயக்கங்களும் சூழல் சிக்கல்களின் முக்கியத் துவத்தை உணர்ந்து வருகின்றன. ஆனால், மோடி அரசோ இதற்கு நேர் எதிர்த் திசையில் பயணிக்கிறது.
மோடி அரசு அண்மையில் முன்வைத்துள்ள “வனப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் – 2021” (Forest Conservation amendment act – 2021) இதற்கொரு சான்று! எந்தத் தங்குதடையுமற்று, வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் “நாட்டுப் பாதுகாப்பு” என்ற பெயரால் காடுகள் அழிப்பதை நோக்கமாகக் கொண்ட சட்ட வரைவாகும் இது! இதுபோல் பல சட்டங்களை மோடி அரசு முன் வைத்துவிட்டது.
ஆனால், மறுபுறம் உலக அரங்கில் நின்று கொண்டு 2070க்குள் நிகர சுழிம உமிழ்தலை இந்தியா சாதிக்கும் என்று பொய் கூறுகிறது.
நரேந்திர மோடி அரசின் இந்தப் பொய் முகத்தைக் கிழித்து, புவி காக்கும் போராட்டத்தை நடத்த வேண்டியது மக்கள் இயக்கங்களின் கடமையாகும்.
சூழலியல் விழிப்புணர்வில் முன்வரிசையில் இருக்கிற தமிழ்நாடு, இதில் கூடுதல் பங்களிப்பு செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் சூழலியல் அமைப்பு களும், மக்கள் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தப் புவி காக்கும் போராட்டத்தை இந்தியாவுக்கே முன்னோடியாக நடத்த வேண்டும். அடுத்த மாநாட்டிற்குள் மாற்றுத் திட்டங்களை இந்திய அரசு முன்வைக்கும் அளவுக்கு இப்போராட்டங்கள் விரிவான மக்கள் பங்கேற்போடு நடைபெற வேண்டும். இம்முயற்சியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தனக்கான பங்களிப்பை செலுத்தும்!
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.