உபி கொடூரம் – இந்திய ஒன்றியத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று லக்கிம்பூரில் கேரி மாவட்டத்தின் திகுனியாபகுதியில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளும் பாஜக கட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் செய்தனர். அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் செய்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது அங்கு வந்த பாஜகவினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் பலியானதாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் கார் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில்,ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரசு மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசம் சென்றார். லக்கிம்பூரில் உள்ள கிராமத்திற்கு பிரியங்கா காந்தி செல்ல முயன்ற போது அவர் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். சிதாபூர் என்ற கிராமத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டார்.

பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாப்பூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்ய வந்தபோது காவல்துறையினருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்த காணொலி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்கா காந்தி காவல்துறையினருடன் நடத்திய வாக்குவாதம் குறித்து சமூகவலைதளங்களில், கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் ஜனதா ஆட்சியில் பிரியங்கா காந்தியின் பாட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாக்குவாதம் செய்தது போன்று இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

தன்னைக் கைது செய்ய முயன்ற காவல்துறையினரிடம் பிரியங்கா காந்தி வாதிடுகையில், “என்னை எதற்காகக் தள்ளிக்கொண்டு சென்று வாகனத்தில் ஏற்ற முயல்கிறீர்கள். என்னைத் தாக்க முயல்கிறீர்கள், என்னைக் கடத்த முயல்கிறீர்களா, என்னைத் துன்புறுத்தி, காயம் ஏற்படுத்த முயல்கிறீர்களா? நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். உங்கள் உயர் அதிகாரிகள், அமைச்சர்களிடம் வாரண்ட் பெற்று வாருங்கள். முதலில் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள்.

அரசியலைப் பயன்படுத்தி விவசாயிகளை அடக்கப் பார்க்கிறது இந்த அரசு என்பது புரிகிறது. இது விவசாயிகளின் தேசம். பாஜகவின் தேசம் அல்ல. பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்திக்கச் செல்ல முயன்றதைத் தவிர எந்தக் குற்றமும் செய்யவில்லை. எங்களை எதற்காகத் தடுத்து நிறுத்தினீர்கள்?

இது உங்களின் ஆட்சிக்கு உட்படாத பகுதியாக இருந்தால்கூட, இந்த தேசத்திற்கென சட்டம், நீதி இருக்கிறது. என்னைத் தள்ளிக்கொண்டு வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு காணொலியில் மாநிலங்களவை உறுப்பினர் தீபேந்தர் ஹூடாவை காவல்துறையினர் தள்ளிக்கொண்டு சென்று வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதைப் பார்த்த பிரியங்கா காந்தி காவல்துறையினரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அந்தக் காணொலியும் வெளீயாகியுள்ளது.

லக்கிம்பூரில் விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கும் போது அந்த அறையை துடைப்பத்தால் சுத்தம் செய்தார்.அவர் சுத்தம் செய்யும் காணொலியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த பிரியங்கா காந்தி, நாம் இருக்கும் அறையை நாம் தான் சுத்தம் செய்ய வேண்டும். அது அரசு அறையாக இருந்தாலும் சரி. என்னுடைய அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும். அதனால் நான் அறையைச் சுத்தம் செய்தேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பாக, பஞ்சாப் காங்கிரசு முன்னாள் தலைவர் சுனில் ஜக்கார் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கடந்த 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார். அதுபோன்று இன்று பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பது பாஜக ஆட்சியின் முடிவு தொடங்கிவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இந்த நாளில், மீண்டும் இந்திரா திரும்பிவிட்டார்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response