சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறைசெயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருப்பதாவது…..
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம். வெளிநாடுகளிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் இன்னும் முற்றிலுமாக அழியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை ஓர் எச்சரிக்கை மணியாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பணியாற்றும் இடங்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் மக்கள் சற்று அலட்சியமாக இருப்பதன் காரணமாக, 20 மாவட்டங்களில் சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரிக்கிறது.
சென்னை மாதவரம் பகுதியில் திடீரென தொற்று அதிகரித்தது. மாநகராட்சி நடவடிக்கையால் உடனடியாக தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர் மண்டலங்களில் தொற்று அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
கொரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால்,அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.