விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தும் தி ஃபேமிலிமேன் 2 – தடை செய்யக் கோரிக்கை

தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட பலர் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இத்தொடரின் மையக்கதையே விடுதலைப்புலிகளையும் அவர்களது வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தையும் மலினப்படுத்தி அதற்கு தவறான உள்நோக்கம் கற்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

கதை என்ன?

இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் உடன் இணைந்து இந்திய ஒன்றியத்தின் பிரதமரைக் கொல்ல விடுதலைப்புலிகள் திட்டம் தீட்டுகிறார்கள். அத்திட்டத்தை இந்திய காவல்துறை முறியடிக்கிறது என்பதுதான்.

இந்தக் கதையை வைத்துக்கொண்டு,காட்சிகள் மற்றும் வசனங்களில், இதுவரை சிங்கள அரசு கூட விடுதலைப்புலிகள் மீது சொல்லாத ஒழுங்கீனங்களை விடுதலைப்புலிகள் செய்வதாகக் காட்டியிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை பாஸ்கரன் என்று வைத்துக்கொண்டு அவருடைய குணநலன்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.

இத்தொடரின் கடைசியில், சிங்கள குடியரசுத் தலைவருடன் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் சென்னையில் ஓர் ஒப்பந்தம் போடுவது போல முடித்திருக்கிறார்கள்.

அக்கூட்டம் சென்னையில் நடக்க என்ன காரணமென்றால்? இலங்கை, சீனாவின் பிடிக்குள் சென்றுவிடாமல் தடுத்து இந்தியாவின் கைப்பிடிக்குள் அவர்களை வைத்துக்கொள்வதற்காக என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில் இப்போது நடந்திருப்பது என்ன தெரியுமா?

‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்க என்கிற சிங்களர் எழுதியுள்ள கட்டுரையில், இலங்கை அம்பாந்தோட்டை முழுக்க சீன மயமாகிவிட்டது என்பதைச் சொல்லிவிட்டு,

இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது

என்று எழுதியிருக்கிறார்.

இந்தக் கதையில் பாசக அரசு இராசதந்திரத்துடன் நடந்து இந்திய பாதுகாப்புக்காக இலங்கையைத் தன் கைக்குள் (விடுதலைப்புலிகள் மற்றும் ஐஎஸ்எஸ் அமைப்புகளின் சதியை முறியடித்து) வைப்பதாகக் காட்டுகிறார்கள்.

ஆனால், உண்மையில் இலங்கை சீனாவின் கைப்பிடிக்குள் சென்றுவிட்டது. இதனால் இனிவரும் காலங்களில் இந்திய ஒன்றியத்துக்குப் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று வல்லுநர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நேரத்தில் இப்படி ஓர் இணையத் தொடரை வெளியிட்டு தம் தோல்வியை மறைக்க பாசகவும் மோடியும் முயன்றிருக்கிறார்கள் என்பது வெளிப்படையகியிருக்கிறது.

ஏற்கனவே புல்வாமா தாக்குதலில் நாற்பதற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்ததற்குப் பதிலடியாக சீனாவின் கைபேசிச் செயலிகளுக்குத் தடை விதித்தது போல இப்போது இலங்கையை சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அதற்குக் காரணமும் தமிழர்களும் இஸ்லாமியர்களும் தான் என்று ஓர் இணையத்தொடர் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

எது எப்படியிருப்பினும் பொய்யான கதை, அதற்கு அபத்தமான ஒரு திரைக்கதை,கேவலமான வசனங்கள், தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் காட்சிகள் ஆகியனவற்றைக் கொண்டிருக்கும் இத்தொடர் முற்றிலுமாகத் தடை செய்யப்படவேண்டிய ஒன்று என்பதில் மாற்றமில்லை.

Leave a Response