தனியார் பொறியியல் கல்லூரிகளின் அடாவடி – சரி செய்ய பெ.ம கோரிக்கை

கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்திவைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும் என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன்* வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்….

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளன.

அதே வேளை கட்டணம் செலுத்திய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அத்துடன் உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று அக்கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளன.

தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இவ்வாறு கல்விக் கட்டணப் பாக்கிக்காக தேர்வு முடிவுகளை தெரிவிக்காமல் நிறுத்திவைத்தது, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான செயல் ஆகும்.

கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலத்தில் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக அவர்களைப் பழிவாங்கக் கூடாது என்றும் அனைதிந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து புகார் அனுப்பி தங்கள் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்படு செய்யுமாறு கோரியுள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அம்முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சொத்து, வருமானம் போன்ற எவ்வகை நிபந்தனையும் இல்லாமல் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்தால், அதைக்கொண்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.

மேலும் வழக்கமான கல்விக் கட்டணத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் ஏற்பாட்டையும் முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response