நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூரில் போட்டியிடும் இரகசியம் என்ன தெரியுமா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. மேலும், பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர். கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவரும் நிலையில், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்தவகையில்,கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் வேலுமணி, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மன்சூர் அலிகான் அண்மையில், தமிழ் தேசியப் புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால், இந்தக் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காத நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மன்சூர்அலிகானுக்கும் தொண்டாமுத்தூருக்கும் என்ன சம்பந்தம்? அமைச்சர் வேலுமணியை எதிர்த்துப் போட்டியிடுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மை வேறு.

தொண்டாமுத்தூர் தொகுதி முஸ்லீம் ஓட்டுகள் அதிகம் உள்ள தொகுதி. இந்த வாக்குகள் பெரும்பாலும் அதிமுக, பாசகவுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.அந்த ஓட்டுகள் திமுகவுக்குச் சென்றுவிடாமல் தடுக்க மன்சூர் பயன்படுவார் என்றும் தொண்டாமுத்தூர் பகுதியைத் தேடி வந்ததற்கு அதிமுக வுக்காக முஸ்லீம் ஓட்டுகளைப் பிரிப்பதுதான் நோக்கமாக இருக்க முடியும் என்கிறார்கள்.

அமைச்சர் வேலுமணி எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்பதற்காக மன்சூரை இங்கு போட்டியிடவைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response