விருதுநகருக்கு வரமாட்டேன் ராஜபாளையத்தை விடமாட்டேன் – நடிகை கவுதமி போர்க்கொடி

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாசக கூட்டணி அமைத்துள்ளது. பாசகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அது எந்தெந்த தொகுதிகள் என்று சொல்லப்படுவதற்கு முன்பே, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை கவுதமி பாசக சார்பில் போட்டியிடுவதாகத் தகவல்கள் வெளியாகின.

அதையடுத்து, அவர் கடந்த 2 மாதங்களாக ராஜபாளையத்தில் குடியேறி கட்சிப் பணிகளைத் தொடங்கினார். ராஜபாளையம் மட்டுமின்றி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் பாசகவினர் தங்களது கட்சி சின்னமான தாமரை சின்னத்தை வரைந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த வாரம் பேட்டியளித்த நடிகை கவுதமி, கட்சியின் மேலிட உத்தரவின்பேரில் தான் கட்சிப் பணிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ராஜபாளையம் தொகுதி வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு பகுதியாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

அத்தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தெலுங்கில் பேசி உறவாடிவந்தார்.

இந்நிலையில், பாசக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வெளியானது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் தொகுதி மட்டுமே பாசகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தகவலறிந்த நடிகை கவுதமி கொந்தளித்துவிட்டாராம். இரண்டு மாதங்களாக வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்து தொகுதி மக்களுடன் நல்ல பிணைப்பை ஏற்படுத்திவைத்துள்ளேன் இப்ப்போது இந்தத் தொகுதியை இல்லையென்பதா? என்று கொதிக்கிறாராம்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடுங்கள் என்றாலும் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

விருதுநகருக்கு வரமாட்டேன் ராஜபாளையத்தை விடமாட்டேன் என்கிற நடிகை கவுதமியின் முடிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response