திமுக வுடன் கூட்டணி அமைத்த அமமுக

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.

மொத்தம் உள்ள 16 வார்டுகளில் தி.மு.க. 8 வார்டுகளிலும், அ.தி.மு.க. 6 வார்டுகளிலும், தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. பின்னர் தே.மு.தி.க. உறுப்பினர் பாக்கியம் அ.தி.மு.க.வுக்கும், அ.ம.மு.க. உறுப்பினர் மருதையம்மாள் தி.மு.க.வுக்கும் ஆதரவளித்தனர்.

இந்நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இதனால் தி.மு.க.விற்கு 8 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 8 உறுப்பினர்களும் ஆதரவு இருந்ததால் இருகட்சிகளும் சம பலத்துடன் இருந்தன.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தி.மு.க.உறுப்பினர் தங்கவேல் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலை நடத்தக் கோரி வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சுவாமிநாதன் விசாரித்து பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் தேர்தல் நடைபெற்றது.

இதில் அ.தி.மு.க. சார்பில் (தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்குச் சென்றவர்) செல்வமும், தி.மு.க. சார்பில் தங்கவேலும் போட்டியிட்டனர்.

பெரியகுளம் உதவிஆட்சியர் சினேகா தேர்தலை நடத்தினார்.தேர்தலில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் தி.மு.க. வேட்பாளர் தங்கவேல் 9 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வத்துக்கு 7 ஓட்டுகள் கிடைத்தன.

தே.மு.தி.க. பெண் உறுப்பினர் பாக்கியம் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்ததால் தங்கவேல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து தங்கவேலுக்கு தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணித் தலைவர் எல்.மூக்கையா, ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் எல்.எம்.பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் நடந்தது. இதற்கு அ.ம.மு.க. உறுப்பினர் மருதையம்மாள் மட்டுமே போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் மூக்கையா நிருபர்களிடம் கூறுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில், யூனியன் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்பதற்கு இது முன்னோட்டம் என்றார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் திமுகவும் அமமுகவும் கூட்டணி அமைத்து பெரியகுளம் ஊராட்ட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response