அன்பான தமிழக மக்களுக்கு நன்றி – மதுரை வந்து சென்ற இராகுல்காந்தி நெகிழ்ச்சி

தமிழர் திருநாள் எனப்போற்றப்படும் பொங்கல் பண்டிையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஏறுதழுவுதல் விழா தொடங்கியது. அமைச்சர் செல்லூர் கே.ராஜு கொடியைசைத்து தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதலில் வாடிவாசலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடபட்டன.

இதைத் தொடர்ந்து சல்லிக்கட்டுக் காளைகள் களமிறங்கின. பதிவான காளைகள் எண்ணிக்கை 1261. சுமார் 600க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடபட்டன. வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக்காசு,அரைப்பான் (மிக்சி),காற்றாடி (ஃபேன்),மாவரைக்கும் இயந்திரம் (கிரைண்டர்),மிதிவண்டி, துள்ளுந்து (மோட்டார் சைக்கிள்) உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பாரம்பரிய சல்லிக்கட்டு விழாவைக் காண, திமுக மாநில இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் காலை 11.15 மணிக்கு மேடைக்கு வந்தார்.

தனி விமானம் மூலம் மதுரை வந்த இராகுல் காந்தி 12.05 மணிக்கு சல்லிக்கட்டு மேடைக்கு வந்தார். இருவரும் அருகருகே அமர்ந்து, வாடிவாசலில் துள்ளி விளையாடிய காளைகள்,மாடிபிடி வீரர்களைக் கண்டு மகிழ்ந்தனர். சிறந்த மாடி பிடி வீரர்களுக்கு இராகுல்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்க மோதிரம் மற்றும் தங்கக்காசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

சுமார் 40 நிமிடம் சல்லிக்கட்டைப் பார்த்த இராகுல் மேடையில் பேசியதாவது…..

தமிழக பாரம்பரிய இந்த விழா ஏற்பாட்டைப் பார்க்கும் போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. சல்லிகட்டு போட்டியை நேரில் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுே போன்ற தமிழர், தமிழர் கலாச்சாரம் தமிழின் சிறப்பு இந்தியாவிற்கு முக்கியம். அதனைக் கொண்டாட இங்கு வந்திருக்கிறேன். இந்தக் கலாச்சார விழாவை ஏற்பாடு செய்து நடத்துபவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். சல்லிக்கட்டு, காளைகளைத் துன்புறுத்தும் விளையாட்டு என்பது தவறானது, சல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படுகிறது. சல்லிக்கட்டை தமிழக மக்கள் ஏன் பெருமிதமாகக் கருதுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டேன்.

தமிழ்மொழியை, தமிழ்க் கலாச்சாரத்தைப் பாதுகாத்துவருபவர்களுக்கு எனது நன்றி. தமிழக மக்களோடு நிற்க வேண்டியது எனது கடமை. தமிழர்களின் கலாச்சாரம் உணர்ச்சிகளை நேசிக்கவே அவனியாபுரம் வந்துள்ளேன்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் மாடுபிடி இளைஞர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
என்றார்.

இராகுல் காந்தியின் ஆங்கில உரையை மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தமிழில் மொழிபெயர்த்தார். இராகுல் சார்பில், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு 2 துள்ளுந்து பரிசளிக்கப்பட்டது.

விழா மேடையில் உதயநிதி பேசும்போது, மதுரை என்றால் வீரம். அவனியாபுரத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன். இனி ஆண்டு தோறும் வருவேன். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்றார்.

சல்லிக்கட்டு விழாவுக்கு வந்த இராகுல் காந்திக்கு பழங்காநத்தம், தெற்குவாசல் க்ரைம் பிரான்ஞ் ஆகிய இடங்களில் மாநகர் மாவட்ட காங்கிரசு சார்பில் உறசாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த நாட்டுப்புற கலைநிகழ்ச்சியை இராகுல் கண்டுகளித்தார்.

இதன் பின் மதுரை தென்பழஞ்சியில் நடந்த பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார்.

அதன்பின் இராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாசக தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி அரசு இரு அல்லது 3 நண்பர்களின் நலனுக்காக விவசாயிகளை அழிக்க சதிசெய்கிறது. விவசாயிகள் போராட்டத்தையே மத்திய அரசு புறக்கணிக்கிறது, விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை.

வேளாண் சட்டங்கள் நடைமுறைக்குவந்தால், அந்த நிலங்கள் விவசாயிகளிடம் இருந்து பறித்துக்கொண்டு, அந்த நிலங்களை தங்களின் நண்பர்களுக்கு வழங்க மத்திய அரசு விரும்புகிறது. ஒரு சிலரின் வர்த்தக நலனுக்காக மத்திய அரசு விவசாயிகளை நசுக்குகிறது.இந்த நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள்தான் இருக்கிறார்கள். விவசாயிகளை நசுக்கினாலும், கஷ்டப்படுத்தினாலும் நாம் தொடர்ந்து வளர்ச்சி அடையலாம் என யாரேனும் நினைத்தால், நம் நாட்டின் கடந்த கால வரலாற்றைப் பாருங்கள்.எப்போதெல்லாம் இந்திய விவசாயிகள் பலவீனப்பட்டார்களோ அப்போதெல்லாம் இந்தியா பலவீனமடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். வேளாண் சட்டங்கள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெற வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் சாமானிய மக்களுக்கு பிரதமர் மோடி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. யாருக்கு பிரதமராக மோடி இருக்கிறார். இந்திய மக்களுக்காக பிரதமராக மோடி இருக்கிறாரா அல்லது சில குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்காகப் பிரதமராக இருக்கிறாரா?.

இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார். இந்தியாவின் எல்லைக்குள் ஏன் சீன இராணுவத்தினர் அமர்ந்திருக்கிறார்கள்

இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

மாலை 3 மணிக்கு மேல் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழக வருகையின் போது நடந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து காணொலியாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இராகுல்காந்தி, அதில், சிறந்த வரவேற்பளித்த மதுரை மக்களுக்கு நன்றி,தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை நேரில் கண்டேன், சல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் ஒழுங்குடனும் பாதுகாப்புடனும் நடந்தது கண்டு மகிழ்ந்தேன்.தமிழ் வரலாறு தமிழ் மொழி தமிழ்ப்பண்பாடு ஆகிய அனைத்தும் மிக முக்கியம் அவற்றைப் பாதுகாப்பது எனது கடமை.

அன்பான தமிழக மக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Response