ரஜினி உடல்நிலை – இன்று மருத்துவமனையின் புதிய அறிக்கை

அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும்,ஐதராபாத்தில் ரஜினி தனிமைப்படுத்திக் கொண்டார்.

நேற்று (டிசம்பர் 25) திடீரென்று ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலைச் சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.

ரஜினி விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினி உடல்நிலை குறித்துக் கூறியிருப்பதாவது….

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படியான முன்னேற்றம் நேற்று இரவு ஏற்படவில்லை. மேலும் தற்போது ரத்த அழுத்தம் இன்னும் உயர்நிலையிலேயே இருந்தாலும் நேற்று இருந்ததை விட தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அவரது பரிசோதனைகளில் பயப்படும் வகையில் எதுவும் வெளிப்படவில்லை. இன்று மேலும் சில பரிசோதனைகள் அவருக்குச் செய்யப்பட உள்ளன. இதன் முடிவுகள் இன்று மாலை தெரியவரும். அவரது ரத்த அழுத்தச் சிகிச்சைகள் சரியான விகிதத்திலும் கவனமாகவும் அவருக்குத் தரப்படுகின்றன.
தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் அவர் இருப்பார். அவரது நிலையற்ற ரத்த அழுத்ததை கருத்தில் கொண்டு முழுமையாக ஓய்வெடுக்கவும், அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.அவரது பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்த அளவு அடிப்படையில் அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து இன்று மாலை தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Response