7 தமிழர் விடுதலைக்காக ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் – அற்புதம்மாள் நன்றி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (24-11-2020), தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தான் எழுதியுள்ள கடிதத்தை வழங்கினார்.

இச்சந்திப்பின்போது,திமு கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுகழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி,திமு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,திமு கழக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் தயாநிதி மாறன் எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்….,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாகச் சிறையில் நீண்டகாலம் வேதனையை அனுபவித்து வரும், திருமதி. நளினி, திரு.ஸ்ரீகரன் என்கிற முருகன், திரு. சாந்தன், திரு. பேரறிவாளன், திரு. ஜெயக்குமார், திரு. ராபர்ட் பயாஸ் மற்றும் திரு. பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுவிக்குமாறு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருவதைத் தங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன்.

நாங்கள் வலியுறுத்திய போதும், அ.தி.மு.க. அரசு அவர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கவில்லை. மாண்பமை உச்சநீதிமன்றம் கடந்த 06.09.2018 அன்று பிறப்பித்த உத்தரவில், “அரசியலமைப்புச் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் கீழ், பேரறிவாளன் தமிழ்நாடு ஆளுநரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். இயல்பாகவே, சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தில் பொருத்தமான முடிவை எடுக்கச் சுதந்திரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

மாண்பமை உச்சநீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலின் படியும் மற்றும் தி.மு.க. கொடுத்த அழுத்தத்தாலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவை இந்த விவகாரத்தைப் பரிசீலித்து, 7 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்படும் வகையில், மீதமுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று, 09.09.2018 அன்று தங்களுக்கு பரிந்துரைத்தது. அமைச்சரவையின் இந்தப் பரிந்துரை தங்களுடைய ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.

மாநில அதிகார வரம்பிற்கு உட்பட்ட எந்த ஒரு குற்றத்திற்காகவும், தண்டிக்கப்பட்ட ஒரு நபருடைய தண்டனையை ரத்து செய்யவோ, குறைக்கவோ அல்லது மாற்றவோ ஒரு மாநில ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 தெளிவாக எடுத்துரைக்கிறது. அமைச்சரவை பரிந்துரைத்த போதும், மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான, சரிசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்துவதுடன், அநீதி இழைப்பதும் ஆகும்.

அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் – அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்சநீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தண்டனை பெற்றவர்களில் ஒருவரான திரு. பேரறிவாளன் 21.01.2020 அன்று தாக்கல் செய்த எஸ்.எல்.பி. மீதான உத்தரவில் “இரு வாரங்களுக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கிறோம். 2014-ஆம் ஆண்டு ரிட் மனு (குற்றவியல் வரம்பு) 48-ன் மீது, 6.9.2018 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் – மனுதாரரின் அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஏதாவது முடிவெடுத்துள்ளதா என்பதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில், 3.11.2020 அன்று இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது – உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் பொதுவெளியில் செய்திகளாக வெளிவந்துள்ளன.

தற்போது, 20.11.2020 அன்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள உறுதிமொழி ஆவணத்தில்,

“பன்னோக்கு விசாரணை முகமை மேற்கொண்டு வரும் விசாரணையில் மனுதாரர் (திரு. பேரறிவாளன்) குறித்து விசாரிக்கவில்லை”. (பத்தி 4.5.1)

“மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடுதலையானது மனுதாரருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநருக்கும் இடைப்பட்ட விவகாரம்”. (பத்தி 4.8)

“இந்த விடுதலை விவகாரத்தில் சிபிஐக்கு எந்தப் பங்கும் இல்லை”. (பத்தி 4.10) என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சிபிஐ தாக்கல் செய்துள்ள மேற்காணும் பதில் மனுவின்படி, மாநில அமைச்சரவை சட்டப்பிரிவு 163-இன் படி தங்களுக்குச் செய்துள்ள பரிந்துரையை ஏற்க மாண்புமிகு ஆளுநருக்கு எந்தத் தடையும் இல்லை. மேலும், இது இரண்டு ஆண்டுகளாக தங்களது அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதென்பது மாநில நிர்வாகத்தைக் குறைத்துக் காண்பிப்பதோடு, மாநில அரசு சட்டத்தின்பாற்பட்டு நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

எனவே, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் 9.9.2018 தேதியிட்ட மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை இப்போதாவது ஏற்று, திருமதி. நளினி, திரு. ஸ்ரீகரன் என்கிற முருகன், திரு. சாந்தன், திரு. பேரறிவாளன், திரு. ஜெயக்குமார், திரு. ராபர்ட் பயஸ் மற்றும் திரு. பி. ரவிச்சந்திரன் ஆகிய தண்டனை பெற்றுள்ள ஏழுபேரின் ஆயுள் தண்டனையையும் குறைத்து, அவர்களை உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநரைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் இக்கடிதத்தை வழங்கியதற்காக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவருடைய பதிவில்…

தமிழக அரசின் அமைச்சரவை தீர்மானத்தில் உடனடியாகக் கையெழுத்திட்டு அறிவை விடுதலை செய்ய மேதகு ஆளுநரிடம் நேரில் சென்று முறையிட்ட மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response