பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது.
தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து
என்ற முல்லைக் கலிப் பாடலைப் போன்ற சங்க கால முல்லை நிலப் பாடல்கள் தொடங்கி தமிழர்கள் பசு வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் ஈடுபட்ட செய்திகள் தமிழ் இலக்கியமெங்கும் விரவிக் கிடக்கின்றன. உழவுச் சமூகமான தமிழர் சமூகத்தில் பசு வளர்ப்பு என்பது வாழ்வியலின் முக்கியமான ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது.
மிக அண்மைக்காலம் வரையில், குறிப்பாக 1990-கள் வரையிலும் கூட கிராமப்புற வாழ்வின் இயல்பான அங்கமாக பசு வளர்ப்பு இருந்து வந்துள்ளது. குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்ற உழவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் பொருளாதாரத் தேவைகளின் ஒரு பகுதியை நிறைவுச் செய்வதில் பசு வளர்ப்பும் பால் உற்பத்தியும் மிக முக்கியமான பங்கை வகித்து வந்துள்ளன.
பால் தொழிலையே முதன்மைத் தொழிலாக கொண்டிராத குடும்பங்களில் கூட வீட்டுத் தேவைக்கென ஒன்றிரண்டு பசுக்கள் வளர்ப்பது என்பது இயல்பான நடைமுறையாக அண்மைக் காலம் வரை இருந்துள்ளது. தங்கள் வீட்டுத் தேவை போக எஞ்சிய பாலை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தேவைக்கு இலவசமாகவோ விற்றோ வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, மாடு பராமரிப்பு என்பது பெண்களின் கைகளில் இருந்து வந்துள்ளது. அதனால் இப்படியான சில்லறை பால் விற்பனையும் வீட்டுப் பெண்களின் கைகளிலேயே இருந்து வந்துள்ளது.
இவ்வாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்த பால் தொழில் பாரம்பரியத்தின் போக்கு கடந்த 30 ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது என்பதும் அதன் தற்போதைய நிலை என்ன என்பதும் மகிழ்வுக்குரிய செய்திகளாக இல்லை.
இந்த நிலையிலும், தற்போது தமிழ்நாடு இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 10-ஆவது இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டின் பால் வளத் துறையின் வெற்றியானது அதன் பால் கூட்டுறவுச் சங்கங்களில் தங்கியுள்ளது. இன்று இந்த முதன்மை பால் கூட்டுறவுச் சங்கங்களில் ஏறத்தாழ 30% சங்கங்கள் செயல்பாடற்று உள்ளன. இதன் பின்னணியைப் புரிந்து கொள்வது என்பது வேளாண் துறையில் மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதியச் சட்டங்களின் தன்மையையும் புரிந்து கொள்ள உதவும்.
1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு பால் வள மேம்பாட்டுத் துறை உருவாக்கப்பட்ட போது அது தமிழகத்தில் பால் தொழிலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகமெங்கும் கூட்டுறவு பால் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. கிராமப்புற அளவில் முதன்மை பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், மாவட்ட அளவில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்ள் மற்றும் மாநில அளவில் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்று மூன்றடுக்குகளைக் கொண்டதாக இவை உருவாக்கப்பட்டன. 1981-ஆம் ஆண்டு தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பால் கொள்முதல், பதப்படுத்துதல், விற்பனை என அனைத்து செயல்பாடுகளையும் பால் வள மேம்பாட்டுத் துறையிடமிருந்து தன் வசம் எடுத்துக் கொண்டது.
முதன்மை பால் உற்பத்தியாளர்கள் கிராமப் புற அளவில் உள்ள முதன்மைச் சங்கங்களில் பதிவு செய்து உறுப்பினர்களாக வேண்டும் ஒவ்வொரு முதன்மைச் சங்கமும் குறைந்தது 25 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இச்சங்கங்களின் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்படி மாநிலமெங்கும் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகளை நிர்ணயம் செய்வார்கள். இச்சங்கங்கள் தங்கள் இலாபத்தை தங்கள் உறுப்பினர்களுடன் பங்கிட்டுக் கொள்கின்றன.
வெறுமனே 2 முதல் 5 லிட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்யக் கூடிய ஒரு குடும்பம் கூட இச்சங்கங்களில் உறுப்பினர் ஆகலாம். அதன் மூலம் தங்கள் உற்பத்தியை இச்சங்கங்களின் மூலம் விற்றுப் பயன் பெறலாம். அளவு ஒரு பொருட்டல்ல என்ற நிலையில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற உழவுத் தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் அதிகம் ஈடுபடத் தொடங்கினர். இதன் விளைவாக 1970 மற்றும் 1980-களில் தமிழ்நாட்டின் பால் உற்பத்தி வெகுவாக உயர்ந்தது.
தற்போது கிராமப் புற அளவில் 12,585 முதன்மை பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தமிழகமெங்கும் உள்ளன. அதில் 2075 சங்கங்கள் முற்றிலும் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட சங்கங்களாக உள்ளன.
இந்த வளர்ச்சி நிலை 1992-ஆம் ஆண்டு ஒரு திருப்பத்தைக் கண்டது. இந்திய நடுவண் அரசு பால் மற்றும் பால் பொருட்கள் ஆணை ஒன்றை அந்த ஆண்டு வெளியிட்டது. அதன்படி பால் தொழிலி்ல் தனியார் ஈடுபட அது அனுமதித்தது. பால் உற்பத்தியைப் பெருக்கவே இந்த ஆணை என்று அப்போது சொல்லப்பட்டது.
இதன் விளைவாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் கொள்முதல் நிலையங்களை கிராமங்களில் அமைக்கத் தொடங்கினர். அவர்கள் வீடு வீடாகச் சென்று பால் உற்பத்தியாளர்களைச் சந்தித்தனர். அதிலும் குறிப்பாக சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களையே அவர்கள் குறி வைத்தனர். அதிக கொள்முதல் விலை முதல் இலவச மாட்டுத் தீனி என அவர்களுக்கு மிகவும் ஈர்ப்பான பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து விலகி தனியார் பால் நிறுவனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
பொதுவாக சங்கத்தின் மூலம் உங்கள் பாலை நீங்கள் விற்பனை செய்ய வேண்டுமெனில், நீங்கள் உங்கள் பாலை எடுத்துக் கொண்டு போய் சங்கத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் பாலை அளந்து, தர நிர்ணயம் செய்து எடுத்துக் கொள்வார்கள். உங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்வார்கள். பின்னர் அவ்வப்போது உங்கள் கணக்குத் தீர்க்கப்பட்டு பணம் கொடுக்கப்படும்.
ஆனால் தனியார் நிறுவனங்கள் தாங்களே வீடு தேடி வந்து பாலை எடுத்துக் கொண்டனர். அன்றாடம் கணக்குத் தீர்த்து அவ்வப்போது பணத்தை அளித்தனர். இது சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் வசதியானதாகத் தோன்றியது.
இப்படி சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்களை தங்கள் வலைக்குள் கொண்டு வந்த பின் இந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலை குறித்த பேரத்தைத் தொடங்கின. இந்த பேரமும் ஒவ்வொரு உற்பத்தியாளரிடமும் தனித் தனியாகவே நடந்தது என்பது முக்கியமானது. ஒரு கிராமத்தின் பல பால் உற்பத்தியாளர்கள் அளிக்க முன் வந்த விலைகளும் ஒப்பிடப்பட்டன. கூட்டுறவு பால் சங்கங்களில் ஒன்றிணைந்த பங்காளிகளாக இருந்தவர்கள் போட்டியாளர்களாக மாற்றப்பட்டனர். ஒருவருக்கொருவர் எதிராக விலைகளை முன் வைக்கத் தொடங்கினர். அவர்களைப் போட்டியாளர்களாக மாற்றிவிட்டு அந்தப் போட்டியில் தனியார் நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் பால் கொள்முதல் செய்து பெரு இலாபம் ஈட்டினர்.
அதன் பின்னர் இந்த தனியார் நிறுவனங்கள் தர நிர்ணயம் போன்ற பல நடைமுறைகளை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் எவரது பாலும் கொள்முதல் செய்யப்படாமல் மறுதலிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த அச்ச நிலையில் பால் உற்பத்தியாளர்களை வைத்து, தங்கள் சட்டத் திட்டங்களுக்கு அவர்களை அடிபணிய வைத்தனர். தாங்கள் வகுக்கும் தர வழிகாட்டு முறைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர். அந்த வழிகாட்டு முறைகளை செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பை நிறுவ பண உதவியும் செய்தனர். இதன் மூலம் சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்களை நிரந்தரமாக தங்களுக்குக் கடன்பட வைத்தனர்.
கூட்டுறவு பால் சங்கங்களின் உறுப்பினர்களாக இணைந்து கொள்முதல் விலையை நிர்ணயம் செய்த அந்த பலம் சிதைக்கப்பட்டது. தனிப்பட்ட பால் உற்பத்தியாளர்களாக மாறிய அவர்களுக்கு விலை மீது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போனது.
இதனிடையே பல சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்கள் இவ்வாறு தனியார் வசம் போனதால் கூட்டுறவுச் சங்கங்கள் வலுவிழக்கத் தொடங்கின. பல சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 25-க்கும் குறைவாகப் போனதால் அவை தங்கள் தகுதியை இழந்தன. பல சங்கங்கள் கொள்முதலற்று பெயரளவிலான சங்கங்களாக மாறிப் போயின. தமிழ் நாடு அரசின் அதிகாரப் பூர்வ கணக்கின் படி இன்று 3,831 சங்கங்கள் இவ்வாறு பெயரளவிளான சங்கங்களாக உள்ளன. இது மொத்தமுள்ள 12,585 சங்கங்களில் 30% ஆகும்.
1958-ஆண்டு தொடங்கி 1981-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 23 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கப்பட்ட கூட்டுறவு பால் சங்க வலைப்பின்னலின் அடித்தளம், இவ்வாறு தனியார் பால் நிறுவனங்களின் வரவால் ஆட்டம் கண்டிருக்கிறது. ஒரு சங்கம் தனது தகுதியை இழக்குமாயின் அதை மீண்டும் எழுப்புவது அத்தனை எளிதல்ல.
தற்போது 15 ஆண்டுகளுக்குப் பின் பால் உற்பத்தியாளர்கள் நேர்ந்துள்ள பேராபத்தை உணரத் தொடங்கியுள்ளனர். சிதைந்த சங்கங்களை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதற்குள் பல சிறு மற்றும் குறு பால் உற்பத்தியாளர்கள் தொழிலை விட்டே சென்று விட்டனர். கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக இருந்த பால் உற்பத்தி இன்று வெறுமனே ஒரு தொழிலாக மாறியதோடு அதன் பன்முகத் தன்மையை இழந்து வருகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்களின் கைகளில் பால் தொழில் முழுமையாக சென்று விடும் அபாயம் உள்ளது. அதன் விளைவாக எளிய மக்களுக்கு பால் எட்டாப் பொருளாக மாறும் பேரபாயம் நிகழக் கூடும்.
அண்மையில் மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுமாயின் உழவுத் தொழிலிலும் இதே பாதையிலேயே பயணப்படும் என்பது உறுதி.
இந்தியாவில் உழவுத் தொழில் என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளையே சார்ந்து உள்ளது. வெளிநாடுகளைப் போல நூற்றுக்கணக்கான ஏக்கர் கொண்ட பெரும் பண்ணைகள் இங்கு இல்லை. அதிகபட்ச பெரும் விவசாய நிலம் என்பதே 30 ஏக்கருக்கு மேல் இருப்பதில்லை. அதைவிட அதிகமான விவசாய நிலம் என்பது நிறுவனங்கள் அல்லது அறக்கட்டளைகள் அல்லது கோயில்கள் வசம் இருப்பவையே.
இன்று விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை நிர்ணயம் செய்யவும் கொள்முதல் செய்யவும் தெளிவான அரசு நிர்வாக இயந்திரம் உள்ளது. கிராமம் தோறும் விவசாயிகள் சங்கங்கள் உள்ளன. அவை வேளாண் துறையுடன் இணைந்து உழவுத் தொழில் சார்ந்த பல முடிவுகளை எடுக்கின்றன. பாசன நீர் பங்கீடுத் தொடங்கி விலை நிர்ணயம் வரை விவசாய சங்கங்களும் வேளாண் துறையும் இணைந்தே செயல்படுகின்றன. உழவர்களின் இந்த கூட்டு பலம் தனியாரின் வரவால் உடைக்கப்படும். இந்த அரசு இயந்திரம் அலட்சியப்படுத்தப்படும். இதுதான் பால் தொழிலில் நடந்தது. சிறு மற்றும் குறு விவசாயிகளும் அதே வலையில் வீழ்ந்து தங்கள் உற்பத்தி மீதும் நிலத்தின் மீதும் கட்டுப்பாட்டை இழப்பார்கள்.
மிக அண்மைக் காலத்தில் பால் தொழிலுக்கு நேரிட்ட இந்த நிலையிலிருந்து நாம் பாடம் கற்று வேளாண் சட்டங்கள் அந்த நோக்கில் கண்டு உண்மை அறிய வேண்டும்.
(தி வயர் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் விரிவான தமிழ் வடிவம்)