விருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 47 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது.

ஐதராபாத் அணியில் மூன்று மாற்றங்கள் – ஜானி பேர்ஸ்டோ, பிரியம் கார்க், கலீல் அகமது நீக்கப்பட்டு வில்லியம்சன், விருத்திமான் சஹா, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ வென்ற டெல்லி அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து அணித்தலைவர் டேவிட் வார்னரும், விருத்திமான் சஹாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர்.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் வார்னர் முதல் ஓவரில் இருந்தே மட்டையை தடாலடியாக சுழட்டினார். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்து அமர்க்களப்படுத்தினார். 25 பந்துகளில் தனது 47-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை திரட்டியது. இதில் வார்னரின் பங்களிப்பு மட்டும் 54 ரன். நடப்பு ஐ.பி.எல். தொடரில் பவர்-பிளேக்குள் அரைசதத்தை எட்டிய முதல் வீரர் வார்னர் தான். அவருக்கு நேற்று 34 ஆவது பிறந்த நாள் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.

வார்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஸ்கோர் 107 ரன்களை (9.4 ஓவர்) எட்டிய போது வார்னர் (66 ரன், 34 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அஸ்வின் பந்துவீச்சில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து மனிஷ் பாண்டே வந்தார்.

வார்னருக்கு பிறகு ரன்விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்து கொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி பவுலர்களை வாட்டி வதைத்தார். அக்‌ஷர் பட்டேல், ரபடாவின் ஓவர்களில் சர்வசாதாரணமாக சிக்சர் பறந்தன. சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 87 ரன்களில் (45 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் மனிஷ் பாண்டே ஸ்கோரை ஓரளவு நகர்த்தினார்.

20 ஓவர்களில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மனிஷ் பாண்டே 44 ரன்களுடனும் (31 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), வில்லியம்சன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டெல்லி தரப்பில் நோர்டியா, அஸ்வின் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார். விக்கெட் இல்லை. ஐ.பி.எல்.-ல் 25 ஆட்டங்களுக்கு பிறகு அதாவது 2017-ம் ஆண்டுக்கு பிறகு அவருக்கு முதல்முறையாக விக்கெட் கிடைக்கவில்லை.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ரன்) வெளியேறினார். இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்), ஹெட்மயரும் (16 ரன்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ரன்களும், ரஹானே 26 ரன்களும் எடுத்தனர்.

முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

12 ஆவது ஆட்டத்தில் ஆடி 5 ஆவது வெற்றியை ருசித்த ஐதராபாத் அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனது கடைசி 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் ஐதராபாத்துக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிடைக்கும்.

Leave a Response