மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமி பொய் வழக்கில் கைது – சீமான் கண்டனம்

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..,

பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த 83 வயதான மனித உரிமை ஆர்வலர் ஐயா ஸ்டான் சுவாமியை மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் (NIA) கீழ் பொய்வழக்குத் தொடுத்து கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

காங்கிரசு ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசியப்புலனாய்வு முகமைச் சட்டத்தை சனநாயக விரோத ஆட்தூக்கிச் சட்டம் என மனிதவுரிமை ஆர்வலர்களும், சனநாயகப் பற்றாளர்களும் கண்டிக்கையில், அதில் திருத்தங்கள் கொண்டு வந்து கட்டற்ற அதிகாரங்களை உள்ளடக்கியதாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டபோதே இதன் மூலம் இசுலாமிய, கிருத்துவ மக்கள், மண்ணுரிமைப்போராளிகள் பாதிப்படையக்கூடும். அச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தித் தனிமனித வஞ்சம் தீர்க்க ஆளும் வர்க்கம் ஏவக்கூடும் எனக் கடுமையாக எதிர்த்தோம். இன்றைக்கு ஐயா ஸ்டான் சுவாமி எனும் மக்களின் நலனுக்காகத் துணைநின்ற பாதிரியாரைக் கைதுசெய்து அதனை நிரூபித்திருக்கிறது மத்திய அரசு.

பழங்குடியினர் நலனுக்காகப் போராடியதாலேயே அவரை மாவோயிஸ்டு என முத்திரைக்குத்தி, தளர்ந்த வயதினையும் பொருட்படுத்தாமல் கொரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் சிறிதும் இரக்கமின்றி அவரை எந்தவொரு ஆவணமும் வழங்காமல் கைது செய்திருப்பது மிகப்பெரும் மனித உரிமை மீறலாகும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இளைஞர்களை நக்சல் முத்திரை குத்தி தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைது செய்துவருவதை ஐயா ஸ்டான் சுவாமி கடுமையாக எதிர்த்து போராடிவந்த வேளையில் அவர் மீதே நக்சல் முத்திரை குத்தி கைது செய்து அதிகார அத்துமீறலை அரங்கேற்றியிருக்கிறது மத்திய அரசு.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கவும், தொழிலாளர் நலனுக்காகவும் பழங்குடியினருக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் அரசுகளுக்கெதிராகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் நீதிமன்றங்கள் மூலம் கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஐயா ஸ்டான் சுவாமியை கைது செய்திருப்பதன் மூலம் நாட்டில் அநீதிக்கு எதிராகக் குரல்கொடுத்து போராடத் துணியும் சமூக ஆர்வலர்களுக்கும், மண்ணுரிமைப் போராளிகளுக்கும் மறைமுக மிரட்டலைக் கொடுத்துள்ளது மத்திய அரசு.

எந்தச் சட்ட முறைமைகள் மூலம் நீதியை நிலைநாட்ட ஐயா ஸ்டான் சுவாமி போராடினாரோ, அச்சட்டத்தின் மூலமே அவரை அடக்கி ஒடுக்கிக் கைதுசெய்திருப்பது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும். 2017 ல் நடைபெற்ற பீமா கோரேகான் மூன்று சம்பவத்தில் தொடர்புடையவராகவும், மாவோயிஸ்ட் எனவும் அவரைக் கைது செய்திருப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.

ஆகவே, தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிற மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், அதற்குச் சனநாயகப் பற்றாளர்கள் யாவரும் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response