சன் ரைசர்ஸ்க்கு முதல் வெற்றி – ரஷித்கான் செய்த மாயம்

13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்றிரவு நடந்த 11 ஆவது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் முகமது நபி, விருத்திமான் சஹா நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர்.

‘டாஸ்’ வென்ற டெல்லி அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் புகுந்தனர்.

தொடக்கத்தில் டெல்லி பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறிய இருவரும் முதல் 5 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரில் வார்னர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்தனர். வார்னர்-பேர்ஸ்டோ கூட்டணி உடையாமல், பவர்-பிளேயில் எடுத்த மந்தமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு மத்தியில் வார்னர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும், பேர்ஸ்டோ கேட்ச் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர்.

இதைத் தொடர்ந்து ரன்ரேட்டை உயர்த்துவதில் தீவிரம் காட்டிய வார்னர் 45 ரன்களில் (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அமித் மிஸ்ராவின் சுழற்பந்தில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து பந்து கையுறையில் லேசாக உரசியபடி விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் கேட்ச்சாக சிக்கியது. அடுத்து வந்த மனிஷ் பாண்டே (3 ரன்) நிலைக்கவில்லை. 3 ஆவது விக்கெட்டுக்கு வில்லியம்சன் நுழைந்தார்.

ஸ்கோர் சீரான வேகத்திலேயே நகர்ந்தது. பேர்ஸ்டோ 53 ரன்களில் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்ட வில்லியம்சன் 41 ரன்களில் (26 பந்து, 5 பவுண்டரி) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து 163 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பிரித்வி ஷா 2 ரன்னிலும்,அணித்தலைவர் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ரன்னிலும், ஷிகர் தவான் 34 ரன்னிலும் (31 பந்து, 4 பவுண்டரி), ஹெட்மயர் 21 ரன்னிலும், ரிஷாப் பண்ட் 28 ரன்னிலும், ஸ்டோனிஸ் 11 ரன்னிலும் நடையை கட்டினர்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கானிடம் சிக்கிய டெல்லி அணி தடம் புரண்டது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 147 ரன்களே எடுத்தது.

இதன்மூலம் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுழலில் மிரட்டிய ரஷித்கான் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐ.பி.எல்லில் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

3 ஆவது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Leave a Response