மத்திய அரசின் முடிவுக்கு எதிராக 7 மாநில முதல்வர்கள் போர்க்கொடி – மு.க.ஸ்டாலின் வரவேற்பு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதென அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், கொரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை நடத்த தடை கோரிய வழக்கில் மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தேர்வுகள் நடத்துவது பற்றி, காங்கிரசுக் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலிக் காட்சி வழியே இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 7 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஷ்கார் முதல்வர் புபேஷ் பாகல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், செப்டம்பரில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. மாணவர்களின் வாழ்க்கை ஏன் ஆபத்தில் தள்ளப்பட வேண்டும்? பிரதமர் மோடியிடம் கடிதம் வழியே இதனைத் தெரிவித்திருக்கிறோம். ஆனால் அதற்கு பதில் இல்லை.

பிரதமர் இதனைப் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை என்றால், நாம் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என மம்தா பானர்ஜி கூறினார். இதேபோன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும், உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

7 மாநில முதல்வர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகும் முடிவு எடுத்ததை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர், நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response