தமிழில் ஆவணங்களைக் கேட்கக்கூடாது- சொல்கிறது மதுரை உயர்நீதிமன்றம், இதுதான் நீதியா?

நீதிமன்ற வழக்கு ஆவணங்களைத் தமிழில் மாற்றித் தருமாறு கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர் மீது சிபிஐ ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் 2012இல் ஊழல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை, சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்களின் நகல்களை தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு சிபிஐ நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவில், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் ஆவணங்களின் நகல்களை மனுதாரர் தமிழில் கேட்கிறார். அதை அனுமதிக்க முடியாது என நீதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்து வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கல்யாணசுந்தரம் மேல்முறையீடு செய்தார்.

இம்மனு நீதிபதி எஸ்.விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடர்பான ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து தருமாறு அவர் கோர முடியாது. ஆவணங்களில் உள்ள விவரங்களை வழக்குரைஞரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள நீதிமன்றம் இவ்வாறு சொல்வது நீதியா? தன் மீதான வழக்கு பற்றிய விவரங்களை இன்னொருவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது சரியா? என்று மக்கள் கேட்கிறார்கள்.

Leave a Response