நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசு அரசு வெற்றி – பாஜகவுக்குப் பின்னடைவு

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதலால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தான் அரசியலில் இருந்துவந்த சிக்கல், காங்கிரசு தலைமையுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திங்கட்கிழமை சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டதால் சுமூகமாக முடிவுக்கு வந்தது.

அசோக் கெலாட்டுடன் அதிருப்தி ஏற்பட்டு தனியாகச் செயல்பட்ட சச்சின் பைலட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் அரசில் ஒற்றுமையாக இணைந்திருப்பதால், காங்கிரசுக் கட்சியின் பலம் பேரவையில் 107 ஆக அதிகரித்தது.

இந்தச் சூழலில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்ததால் ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் அசோக் கெலாட் கோரினார்.

அப்போது தனது ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க பல்வேறு சதிச்செயல்கள் தீட்டியதைச் சுட்டிக்காட்டியும், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அசோக் கெலாட் பேசுகையில் “எத்தனை முயற்சிகள் செய்து எனது ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தாலும், எந்த விலை கொடுத்தேனும் ஆட்சியைக் கவிழ விடமாட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக 107 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 200 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வென்றதாக,பேரவைத்தலைவர் சி.பி. ஜோஷி அறிவித்து பேரவையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதன்மூலம், எதிர்க்கட்சிகள் ஆளும் ஒவ்வொரு மாநிலமாக சிக்கலை ஏற்படுத்தி ஆட்சியைக் கலைத்து தமது ஆட்சியை நிறுவி வரும் பாஜகவுக்கு இது பின்னடைவு என்கிறார்கள்.

Leave a Response