கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் காவி பெயிண்ட்டை ஊற்றிச் சென்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. காவி வண்ணத்தை ஊற்றியதாக பாரத்சேனா என்கிற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வுக்கு திமுக தலைவர் வெளியிட்டு உள்ள கண்டனத்தில்….
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்.
அதனால் அவர் பெரியார்!
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! எனக் கூறி உள்ளார்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள கண்டனத்தில்….
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்!
கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்!
கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் எனக் கூறி உள்ளார்.
பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக நாம் ஹமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது….
கோவையில் ஐயா பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசி அவரைக் கொச்சைப்படுத்த முயலும் சமூக விரோதிகளின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்கோடு அக்கொடுஞ்செயலைப் புரிந்தவர் எவராயினும் அவரை கடுஞ்சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.