கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடக்கத்தில், மதுவுக்கு அடிமையானவர்கள் சற்று சிரமப்பட்டபோதிலும், தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுவின் பிடியிலிருந்து மீளத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் மே 7 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவைத் தளர்த்திய தமிழக அரசு, மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. அதனால், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், மதுக் கடைகள் முன்பாக கூட்டம் கூடியது. காவல்துறையினர் மூலம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலை உருவானது.
மதுக்கடைகளை தமிழக அரசு அவசரகதியில் திறந்ததற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து கடைகளை மூடிவைத்திருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். அதனால் சென்னை உயர் நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.
அதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிமன்ற உத்தரவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பாக வாதிடப்பட்டது. அதனால் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் கடைகளைத் திறந்து மது விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக, சில வழிகாட்டு நெறிமுறைகளை மதுக்கடைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி, ஒரு வாரத்துக்கு ஏழு வண்ணங்களில் டோக்கன்களை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மணிநேரத்தில் 70 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு கடையில் 500 பேருக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
மேலும், டாஸ்மாக் திறப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை 2 மாதங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.இதனால் இரண்டு மாதங்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.