அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் – உறுதியானது ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் உள்பட இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி நிறைவுக்கு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், வைரஸ் தொற்று அதிகரித்தே காணப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர்கள் கொண்ட மருத்துவ வல்லுநர் குழு, முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தியது.

முதலமைச்சரைச் சந்தித்த பின்பு, மருத்துவ நிபுணர்கள் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் பிரதீபா கூறியதாவது:

தமிழகத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது.என்னதான் அரசுநடவடிக்கை எடுத்தாலும் கொரோனா தாக்கம் அதிகரித்தே வருகிறது.தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிப்பு தேவை. எனவே, ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை வைத்துள்ளோம் என்றார்.

ஏற்கெனவே, நாளை முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலையில் நடக்கவிருக்கும் பிரதமர் ஆலோசனையின் போது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முடிவெடுத்துவிட்டு மாலை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response