நாம் நாட்டின் பூர்வகுடிகள் எனும் திமிரோடு போராடுவோம் – வண்ணரப்பேட்டையில் சீமான் உரை முழுமையாக

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் மூன்றாம் நாளான 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்,

உடன் மன்சூர் அலிகான் மற்றும் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் அன்வர் பேக் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சீமான் நிகழ்த்திய கண்டனவுரையின் எழுத்தாக்கம்…..

என்னுடைய பேரன்பிற்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒரு காலம் வரும் அப்பொழுது நேர்மையாக வாழ்வது என்பதே உள்ளங்கையில் நெருப்புத் துண்டை வைத்திருப்பதற்குச் சமமாகும் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார். நேர்மையாக வாழ்வது நெருப்புத் துண்டை கையில் வைத்திருப்பதற்குச் சமமான ஒரு நிலை அது இன்று உருவாகி இருப்பதை நாம் பார்க்கிறோம்.

அழிவுக்காலத்தில் கொடுமையான தலைவர்கள் தீய மந்திரிகள், துரோகமிழைக்கும் நீதிபதிகள், பொய்யுரைக்கும் சட்டவல்லுநர்கள் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட அந்த அழிவுக்காலத்தில்தான் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம் என்பதை என் அன்பு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தலைவன் தன் நாட்டைப் பற்றி, தன் நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பற்றி, அவர்களுடைய பாதுகாப்பைப் பற்றி, நல்வாழ்வை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் அவனுக்குச் சாதி, மதம், கடவுள் பற்றிச் சிந்திக்க நேரமே இருக்காது. ஆனால் இதை எதையுமே சிந்திக்காதவர்களுக்கு மதம், கடவுளை மட்டுமே எப்போதும் சிந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும். அதுவே அதிகாரம்! அதுவே அரசியல்! அதுவே அன்றாடப் பிழைப்பு என்றாகிவிடும்.

நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சி என்பது எதை வைத்தும் தூக்கி நிறுத்த முடியாத அளவுக்குப் வீழ்ச்சி அடைந்துவிட்டது.உலக வங்கி மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது அருகிலுள்ள பங்களாதேசு, நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதாரம் கீழே போய்விட்டது என்று சொல்கிறது. வேலை வாய்ப்பின்மை, 28 கோடிக்கும் குறையாத மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்கப் போகிறார்கள். ஒரு வயது முதல் 20 குழந்தைகளில், 6.4 விழுக்காடு குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள்.

இதை எதைப் பற்றியும் கவலைப்படாது மதம் மட்டுமே ஆட்சி, அதிகாரம் என்று செயல்படுகிறார்கள். மேற்கு வங்க பாராளுமன்ற உறுப்பினர் மௌலா மௌத்ரா குறிப்பிடுவதுபோல மதத்துக்கும் அரசுக்கும் வேறுபாடு என்பது இல்லை.

இந்த நிலை தொடருமானால் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் கற்பித்தது போல, நாம் வாழுகிற நாடு பெரிதா? நாம் சார்ந்திருக்கும் மதம் பெரிதா? என்று கேள்வி வருகிறபோது தான் வாழ்கின்ற நாட்டை விட மதம்தான் பெரியது என்று இந்த நாட்டை ஆள்பவர்கள் எண்ணத் தொடங்கிவிட்டால் இந்த நாடு நாசமாவதைத் தவிர வேறு வழியில்லை! அதை ஆழ்ந்து சிந்தித்து ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தேசிய குடியுரிமைச் சட்டத்திருத்தம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது; மனித குலத்திற்கே எதிரானது.

அத்துமீறி குடியேறுபவர், சட்டம் மீறி குடியேறுபவர் என்று பார்த்தால், இவர்கள் குறிப்பிடுவது போலப் பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷிலிருந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து ஒருவன் தன் வசதியான வாழ்வுக்காக, பொருளாதாரத்தைப் பெருக்கத்திற்காக அத்துமீறி நுழைந்திருப்பான் என்றால் அதைவேண்டுமானால் அத்துமீறி குடியேறிவிட்டான் என்று சொல்லலாம். ஆனால் வாழ வேறு வழியே இல்லை என்று ஒருவன் வந்திருப்பான் என்றால், அவனைச் சாதி, மதம், இனம் ஏதும் பார்க்காமல் உடனடியாக ஏதிலியாக அகதியாகத்தான் பார்க்க வேண்டும். அதுதான் உலகம் முழுதும் இருக்கக் கூடிய மாண்பு.

அதுவும் உயிர்களைக் கொல்வது பாவம் என்று போதித்த புத்தனின் பூமி, எறும்பைக் கூட மிதித்து விடுவோமோ என்று மயிலிறகால் தூக்கி பிடித்து நடந்து சென்ற மகாவீரரின் மண். உலகிற்கு அகிம்சையைப் போதித்த அண்ணல் காந்தியின் தேசம், ஒரு மனிதனுக்கு இந்த நாட்டில் வாழ இடமே இல்லை என்று சொல்வதைப்போலக் கொடுமையான ஒன்று இந்த உலகில் இல்லை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இது ஆபத்தானது இல்லை, ஏனென்றால் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் என்ன ஆதாரத்தைக் காட்டுவார்கள் என்று பாருங்கள். முழுமையாகக் கல்வி போய்ச் சேரவில்லை, இன்னும் சரியான பாதைகூட இல்லை அவர்கள் என்ன குடியுரிமைச் சான்றிதழ் தருவார்கள்?

இனிமேல் பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேசிலிருந்து, ஆப்கானிஸ்தானிலிருந்து யாராவது வருவார்கள் என்றால் அவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னால்கூட அதில் ஒரு நியாயம் உள்ளது என்று கூறலாம். ஆனால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 50 ஆண்டுகளுக்கு மேலாக வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களை, உனக்குக் குடியுரிமை இல்லை; வெளியேறு! என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். அதைத்தான் ஏற்கமுடியாது என்கிறோம்.

நாங்கள் இங்கு தான் இருந்தோம்; பூர்வீகக் குடிகள்! இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை. தமிழர்கள் நாங்கள் தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம். இது என் நாடு. என்னுடைய போற்றுதலுக்குரிய அண்ணன் பழனிபாபா அவர்கள் சொன்னதைப் போல. நான் இங்குதான் இருந்தேன். மார்க்கம்தான் என்னிடம் வந்தது. ஆனால் நீ அப்படி இல்லை, நீயே(ஆரியன்) அங்கிருந்து வந்தவன் என்கிறார். வந்து குடியேறிய நீ சொந்தக் குடிகளிடம் குடியுரிமை கேட்கிறாய்!

இதில் எது குடியுரிமைக்கான சான்று? பிறப்புச்சான்றிதழ், வங்கிக் கணக்கு, கல்விச் சான்றிதழ், சொத்து உடைமைகள், வீட்டுப் பத்திரம், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை? இதில் எதுவுமே இல்லை என்றால் வேறு எதுதான் குடியுரிமைக்கான சான்று? ஆதார் அட்டை கூடக் குடியுரிமைக்கான சான்று இல்லையென்றால் வேறு எதுதான் சான்று?

ஆதார் அட்டை கொண்டு வந்தது பிரிட்டன். ஆனால் தனிமனித சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டது பிரிட்டன் அரசு. பின்பு இதை ஹிட்லர் கொண்டு வந்தார். அதை வைத்துதான் யூதர்களைத் தனியாகப் பிரித்து அழித்தான். சொந்த நாட்டு மக்களை நம்பாதவர்கள், பாதுகாப்பு என்ற ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி ஆதார் அட்டை உருவாக்கினார்கள். அதுவும் குடியுரிமைக்கான சான்றிதழ் இல்லையா? என்றால் அதற்குப் பதில் இல்லை!

130 கோடி மக்களைக் கொண்டுள்ள துணைக்கண்டம், இந்திய நாட்டில் உள்ள மாநிலத்தின் அளவு கூட இல்லாத பிரான்சிடமிருந்து நாட்டின் பாதுகாப்புக்கு ரபேல் என்கிற போர் விமானத்தை வாங்கினீர்கள். அதில் ஊழல். அதை வாங்கிய ஆவணங்களைக் கொடு என்று உச்ச நீதிமன்றம் கேட்டபோது அது பாதுகாப்புத்துறை துறை அலுவலகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது என்றார்கள். ஒரு கோப்பைக் கூடப் பாதுகாப்பாக வைக்க முடியாத பாதுகாப்புத்துறை எப்படி நாட்டின் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்?

கர்நாடகாவில் ஒரு வதந்தி, பங்களாதேசிலிருந்து வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு வதந்தி பரவியது. ஒரே இரவில் அவர்கள் வீடுகளை இடித்துவிட்டார்கள். அவர்கள் இந்திய குடிமக்கள். இந்திய குடியுரிமை பெற்ற மக்கள். ஒரு வதந்திக்கு நடந்த அநீதிச் செயல்தான் நம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எங்கே இது தொடருமோ என்ற பயம் வருகிறது.

முதலில் நாம் ரேசன் அட்டையைக் காட்டித்தான் வாக்களித்துக் கொண்டிருந்தோம். டி.என்.சேசன் தேர்தல் ஆணையராக வந்த பிறகு எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்று ஒன்றைக் கொண்டு வந்தார். அது கொண்டு வந்த பிறகு என்ன ஆயிற்று என்றால் எந்த இடத்தில் வாக்கு தனக்கானது இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு அந்த மக்களின் வாக்குகளை மொத்தமாக நீக்கிவிட்டார்கள்.

உதாரணத்திற்குக் கன்னியாகுமரியில் பல கிறிஸ்தவ மீனவ கிராமங்கள் ஓகி புலால் பாதிக்கப்பட்டது; பாராளுமன்றத் தேர்தல் வரும்போது இந்த வாக்காளர்கள் தனது வாக்காளர்கள் இல்லை என உறுதியாகத் தெரிந்து கொண்ட இந்த ஆட்சியாளர்கள் 42,000 வாக்காளர்களை ஒரேநாளில் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார்கள். இப்போது அதுபோல் தமக்குப் பிடிக்காதவர்களை எளிதாகக் குடியுரிமை பெற்றவர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, எந்தச் சான்றிதழைக் காட்டினாலும் இது செல்லாது என்று சொல்லும் வாய்ப்புள்ளது.

நாட்டு மக்களுக்குத் தூய குடிநீர் கொடுக்கத் திட்டம் இருக்கின்றதா? தூய காற்றை, பாதுகாப்பான சுற்றுச் சூழலை உருவாக்கத் திட்டம் இருக்கிறதா? பல இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் வீதியில் நிற்கிறார்களே, அவர்களுக்கு வேலை கொடுக்கத் திட்டம் இருக்கிறதா? நாட்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரம் கொடுக்கத் திட்டம் இருக்கின்றதா? 2022 க்குள் எல்லோருக்கும் வீடு என்று பிரதமர் சொல்கிறார். எனில் இன்னும் வீடே இல்லாதவன் சான்றிதழ் எப்படி வைத்திருப்பான்? விடுதலை பெற்ற 75 ஆண்டுகால இந்தியா இன்னும் மின்சாரமே போகாத பல ஆயிரம் கிராமங்கள். பிரதமர் சொல்கிறார் மின்னணு பரிமாற்றத்திற்கு வருவோம் என்று. மின்சாரமே சென்று சேராதவன் மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு எப்படி வருவான்?

ஈழத்தமிழருக்கு ஏன் நீங்கள் குடியுரிமை கொடுக்கவில்லை. என்றால் அவர்களும் அத்துமீறிக் குடியேறியவர்கள் தான் என்கிறார்கள். அப்படியென்றால் எந்தச் சட்டமுறைப்படி நீங்கள் இலங்கையில் ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட்டீர்கள்? ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு உறுப்பினர்களில் 800 உறுப்பினர்களில் 650 உறுப்பினர்கள் இந்தக் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர கருத்து தெரிவித்தார்கள். உடனே இது உள்நாட்டுப் பிரச்சனை நீங்கள் தலையிடாதீர்கள் என்று இந்தியா கூறியது. எனில் இலங்கையில் நடந்தது என்ன வெளிநாட்டு பிரச்சினையா? உள்நாட்டுப் பிரச்சினைதானே? நீங்கள் யாரை கேட்டுத் தலையிட்டீர்கள். சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு அந்நிய நாடுகளில் கையேந்துவது ஏன்? அதற்குப் பதில் உண்டா?

இங்கு இருக்கிற இஸ்லாமிய கிறிஸ்தவன் வெளியேறனும், ஆனால் நீங்கள் வாரம்தோறும் இஸ்லாமிய, கிறித்துவ நாடுகளுக்குப் போய்க் கட்டித்தழுவி கை குலுக்குவீர்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகிறார் என்பதற்காக, குஜராத்தில் குடிசைகள் உள்ள பகுதிகளை 7 அடி உயரத்திற்கு மதில் சுவர் வைத்து மறைக்கிறார்கள். இந்த மாதிரி அறிவாளிகளை உலகில் எங்கேயும் பார்க்க முடியாது. சுவர் கட்டும் கல்லை வைத்து அந்தக் குடிசைவாழ் மக்களுக்கு வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கலாம்.

ஈழத்தமிழ் உறவுகளை உலகில் பல நாடுகளில் தங்கள் தாயகப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு குடியுரிமை கொடுத்துள்ளார்கள். ஐரோப்பிய நாடுகள் முழுக்கத் தமிழர்கள் வாழ்கிறார்கள். பல நாடுகள் குடியுரிமை கொடுத்துள்ளது. ஒருபடி மேலே போய்க் கனடா ஜனவரி மாதத்தைத் தமிழ் கலாச்சார மாதமாக அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா தமிழை இரண்டாவது மொழியாக ஆக்கியுள்ளது. பல நாடுகள் ஆரத்தழுவி அன்பு கொண்டு நேசித்து வாழ வைத்துள்ளது. ஆனால் தங்களின் தந்தையர் நாடு என்று நம்பி இங்கு வந்த நம் ஈழ மக்களை இன்னும் அத்துமீறிக் குடியேறியவர்கள் என்று குடியுரிமை தராது அவர்களை நிராகரித்துள்ளது.

எனவே இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ச்சியாக நாம் போராடுவோம். ஆனால் நீங்கள் அச்சப்படாமல் இருக்க வேண்டும். இது நம் நாடு!. இந்த நாடு நாடாவதற்கு முன்பிருந்தே நிலைத்து வாழக்கூடிய பூர்வ குடிமக்கள் நாம்.

இந்த நாட்டின் விடுதலைக்குத் தூக்கிப்பிடித்த தேசியக்கொடியில் உள்ள சிவப்பு நிறத்தில் நாம் சிந்திய இரத்தமும் உள்ளது. விடுதலைப் போராட்டத்தில் ஐதர் அலி, திப்புச் சுல்தான் வரலாற்றை அழித்துவிட்டு இந்திய விடுதலைப் போராட்டம் இல்லை. நம் அருமை பெரும்பாட்டி வேலுநாச்சியாருக்கு, திப்புச் சுல்தான், ஐதர் அலி ஆகியவர்கள் உதவியது போல் வரலாற்றில் வேறு யாரும் உதவியதில்லை. நமது மூதாதை வீரப்பாட்டன் தீரன் சின்னமலை தளபதியாக இருந்துதான் திப்புச் சுல்தான் படையை வழி நடத்தியுள்ளார். நமது பெரும்பாட்டன்கள் மருதிருவர் வரலாற்றை, திப்புச் சுல்தான் இல்லாது எழுதமுடியாது.

நீங்கள் ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கத்தின் பங்களிப்பு ஏதாவது ஒன்றைச் சொல்லச் சொல்லுங்கள். ஏதாவது ஒன்று.? பிரிட்டன் ராணியின் வருகையின்போது ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தியவர்கள் அவர்கள். வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடி ஆற்றலை இழந்துவிடாதீர்கள், சுதந்திரம் கிடைத்த பிறகு நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இங்கு இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் கிருத்தவர்கள் என்று அதனுடைய நிறுவனர் கோல்வர்கர் பேசியுள்ள சான்று இருக்கிறது. இவர்கள் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள். விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நின்றவர்கள். எத்தனை முறை மன்னிப்புக் கடிதங்களை ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு எழுதினார்கள் என்பது சான்று இருக்கிறது. “உங்களுக்கு விசுவாசமாக இருப்பேன், உங்களுக்கு உண்மையாக இருப்பேன், என்னை மன்னித்து விடுதலை செய்யுங்கள்” எத்தனை கடிதங்கள் வீரசாவர்க்கர் எழுதியதற்குச் சான்று இருக்கிறது.

அதே காலகட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு இளைஞன் அதே பிரிட்டிஷ் ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினான். அதே மன்னிப்புக் கடிதம் என்று நினைத்துப் படித்தால், “நான் அரசியல் கைதி அல்ல; உங்கள் ஆட்சிக்கு எதிராகப் போர் செய்த போர்க் கைதி, எனவே அரசியல் கைதிகளைப்போல என்னை நீங்கள் தூக்கிலிடக் கூடாது, போர்க்கைதிகளைப் போலத் துப்பாக்கியால் அல்லது பீரங்கியால் சுட்டுக் கொல்ல வேண்டும்!’ என்று எழுதினான். அவன் பெயர் பகத்சிங். அவன் இந்த நாட்டுக்கு விடுதலைக்குப் போராடிய புரட்சியாளன்.

இந்தப் போராட்டத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதிக் கொடுத்தார் வாஜ்பாய். அதே காலத்தில், விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் ஒரு இளைஞன் மீசை முடியை ஒவ்வொன்றாகப் பிடுங்கியபோதும், சுருட்டு நெருப்பினால் சுட்டபோதும் விடுதலைப் போரட்டத்தை விட்டு விலக முடியாது என்று துணிந்து நின்றார். அவர்தான் எங்கள் ஐயா மனிதப் புனிதர் நல்லகண்ணு அவர்கள்.

கொஞ்சம் இரத்தம் தாருங்கள்! நிறையச் சுதந்திரம் தருகிறோம்! என்று முழங்கிய வீரப் புரட்சியாளன் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய இராணுவத்தைக் கட்டுவதற்குப் பர்மாவுக்குச் சென்று பர்மாவில் உள்ள எல்லா இந்திய வியாபாரிகளையும் கூப்பிட்டு வைத்துப் பேசுகிறார். அப்போது அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் எழுந்து வந்து ஒரு கோடி ரூபாய் சுபாஷ்சந்திரபோசிடம் கொடுத்தான். அவன்பெயர் முகமது அப்துல் ஹபிப். அன்று அது ஒரு கோடி. இன்று அந்தத் தொகை பல நூறு கோடி மதிப்பு இருக்கும். அவ்வளவு பெரிய தியாகங்களைச் செய்த மக்கள் நாம். இந்த நாட்டின் விடுதலைக்குப் பல ஈகங்களைச் செய்த நாம் உளவியலாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.

நம்மைச் சிறுபான்மை என்று சொல்பவன் எல்லோரும் சிறுபான்மை என்பதை நீங்கள் உணர வேண்டும். என் அன்பிற்குரிய தம்பி தங்கைகள் கவனிக்க வேண்டும், உலகில் முதலில் தோன்றியது சாதி மதமா? மொழி இனமா? இதுதான் நாம் கேட்கும் கேள்வி. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்த வர்ணாசிரம கோட்பாடுகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்குள்ளாகத்தான் கட்டமைக்கப்பட்டது என்கிறார். நீ தாழ்ந்த சாதி என்றான். அதை நம்பவைக்க மதம். மதத்தை நம்ப வைக்கக் கடவுள். கடவுளை நம்ப வைக்க இதிகாச, புராண, வேதங்கள். அதை நம்பினோம், நாம் அடிமையானோம் என்று எழுதுகிறார்.

இது சாதி, மதங்கள் எல்லாம் மூவாயிரம் ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழன் இந்த நிலத்தில் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைத்து வாழக்கூடிய மூத்த தொல்குடிமக்கள். மனிதன் தோன்றியதும் முதலில் தோன்றியது மொழி. மொழி பேசும் மக்களின் கூட்டம் இனம். அந்த இனம் நீண்ட காலம் நிலைத்து வாழக்கூடிய நிலத்தைப் பெற்றிருந்தால் அது தேசிய இனம். நாம் பெருத்த தேசிய இனம். அதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய நாடு விடுதலை பெற்று, எந்த மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று விவாதம் வந்தபொழுது அந்தக் குழுவில் நம் தாத்தா காயிதே மில்லத் இருக்கிறார். இந்திய மொழிகளில் ஆட்சி மொழியாக வர வேண்டியது தமிழ்தான் என்கிறார். ஏனென்றால் தமிழ்தான் மிகத் தொன்மையான என்பதை எந்த வரலாற்று ஆசிரியரும் மறுக்க இயலாது என்கிறார். அந்த மொழி என் தாய்மொழி எனக்கு அதில் பெருமை என்கிறார். பிரதமர் நேரு அவர்கள் சாகிப் நீங்கள் உருதைக் கேட்பீர்கள் என்று நான் நினைத்தேன் என்றபோது, கண்ணியமிகு நமது காயிதேமில்லத் அவர்கள் “நான் அல்லா என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன். இஸ்லாம் எனது வழி! இன்பத் தமிழே என் மொழி!” என்று சொன்னார்.

இந்த மண்ணில் பழனிபாபா என்ற புரட்சியாளர் தோன்றினார். அவர் நமக்குக் கற்பித்தது சாதி மதங்களாக நீங்கள் பிரிந்து நின்றீர்கள் என்றால் உங்களைத் தனிமைப் படுத்துவார்கள், அச்சப்படுத்துவார்கள். நீங்கள், மொழி இனமாக இணைந்து நின்றீர்களானால் நீங்கள் வலிமை பெறுவீர்கள், பாதுகாப்பாக வாழ்வீர்கள் என்கிறார்.

அதைத் தமிழிளம் தலைமுறையினர் புரிந்துகொண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்து நின்று, நமக்கு எதிராக உள்ள அத்தனையும் எதிர்த்துப் போராடி நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும். தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும் என்பதை உணர வேண்டும். நாம் தகுதி உள்ளவர்களாக மாற வேண்டும்.

அறவழியில் போராடிய என் அன்பு சொந்தங்களைத் தடியடி நடத்திக் கலைப்பது, வலுக்கட்டாயமாக அடித்துக் கலைப்பது என்பது கொடுங்கோண்மை. அந்தச் செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய மக்களைத் தடியடிக்கு எதிராகப் போராடும்படியாக மாற்றிவிட்டார்கள்.

ஓரிடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது தேவையற்ற தடியடி நடத்தி தமிழ்நாடு முழுக்க இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தி விட்டார்கள். எனவே தொடர்ச்சியாக எதிர்த்து நாம் போராடுவோம். நாம் நாட்டின் பூர்வீக குடிகள் என்ற திமிரோடு துணிவோடு தொடர்ச்சியாகப் போராடுவோம்.

புரட்சி எப்போதும் வெல்லும்.
நமது போராட்டம் நாளை அதைச் சொல்லும்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response