ரஜினியையும் மோடியையும் கிண்டல் செய்த கமல்

நடிகர் கமல்ஹாசனின் 65 ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி பரமக்குடியில் உள்ள கமல் வீட்டில் கமலின் தந்தை சீனிவாசன் சிலை திறக்கும் விழா நடைபெறுகிறது.

அதில் கலந்துகொள்ள நேற்று இரவு மதுரைக்குக் குடும்பத்தினருடன் வருகை தந்தார் கமல்ஹாசன். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

கேள்வி்: நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கிய விருதை நடிகராகவும், அரசியல்வாதியாகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: 40 வருடங்களுக்கும், 60 வருடங்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. சக நடிகராக எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருது வழங்கிய கட்சிக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில தினங்களுக்கு பிறகு எனக்கும் விருது வழங்கலாம்.

கேள்வி: மாற்று அரசியல் வேண்டும் எனக் கூறி வந்த நீங்கள் தற்போது சிலை திறப்பது சரியா?

பதில்: நான் எனது இடத்தில் எனது தந்தையின் புகைப்படத்திற்கு பதிலாக சிலை வைக்கிறேன். எனது வழிபாட்டிற்காக தான் சிலை நிறுவி இருக்கிறேன். அதில் ஏதும் தவறு இல்லை.

கேள்வி: மத்திய, மாநில அரசுகள் பல லட்சம் திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறி வருகின்றன. இதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: லட்சங்கள் வேறு, திட்டங்கள் வேறு.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும், மக்கள் நீதி மய்ய கட்சியிலிருந்து நிர்வாகிகள் சிலர் விலகிச் சென்றது தொடர்பான கேள்விக்குப் பதில் கூறாமல் கிளம்பிச் சென்றார். அவருடன் சாருஹாசன், மகள்கள் ஸ்ருதி, அக்‌ஷரா உட்பட குடும்ப உறுப்பினர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.

இந்தப் பேட்டியில் 60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் எனக்கு விருது தராமல் 40 ஆண்டுகளாக இருக்கும் ரஜினிக்கு விருது கொடுத்திருக்கிறார்கள் என்கிற தகவலை வெளியிட்டதன் மூலம் மோடியையும் ரஜினியையும் கமல் கிண்டல் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Leave a Response