பெற்ற தாய் மீது சாணியை வீசுவது போல .. – பெ.மணியரசன் சீற்றம்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு :உலகெங்கும் தமிழர்கள் பதற்றம்!
குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க! என்று சொல்லி
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழர்களுக்கு மட்டுமின்றி, உலக மக்களுக்கு உரிய வாழ்வியல், அரசியல், அறம் ஆகிய கோட்பாடுகளை வழங்கியவர் திருவள்ளுவப் பெருந்தகை.

அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்பதால்தான் உலகத்திலேயே மிக அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட சமயச் சார்பற்ற நீதி நூலாக அவர் தந்த திருக்குறள் விளங்குகிறது.

தஞ்சை பிள்ளையார்பட்டியில் தமிழினப் பேராசான் திருவள்ளுவர் சிலையை இழிவுபடுத்திய கயவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாறுபட்ட கருத்துடைய குழுக்களிடையே – மக்கள் பிரிவுகளிடையே ஏற்படும் கருத்து மோதல்களுக்கு அப்பாற்பட்டவர் திருவள்ளுவர்.

அவர் தமிழினத்தின் உலக அடையாளமாக விளங்குகிறார். அவருடைய சிலையை இழிவுபடுத்துவதாக நினைத்து, இத்தீச்செயலில் ஈடுபட்டவர்கள் தங்களைத்தான் இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஒருவன் தன்னைப் பெற்ற தாய் மீது சாணியை வீசி இழிவுபடுத்தியது போன்றதுதான், இந்தத் தீச்செயல்!

தமிழினப் பேராசான் திருவள்ளுவப் பெருந்தகையின் சிலையை இழிவுபடுத்திய கயவர்களையும், அவர்களுக்குப் பின்புலமாக உள்ளவர்களையும் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்திட காவல்துறையை முழு ஆற்றலுடன் தமிழ்நாடு அரசு செயல்பட வைக்க வேண்டும்.

இதில் காலத்தாழ்வு ஏற்படக் கூடாது. காலத்தாழ்வு ஏற்பட்டால், தமிழ்நாடு முழுவதும் பதட்டநிலை கூடுதலாகும் வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response