சிதம்பரம் நடராசர் கோயிலில் நடந்த அநியாயம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும் என்று
தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப்
பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்….

“கோயில் என்றால் தில்லை நடராசர் ஆலயம்தான்” என்று உலகம் முழுவதும் பரவி வாழும் சைவப் பெருமக்கள் போற்றும் சிதம்பரம் ஆலயத்தை, பொது தீட்சிதர்கள் மிகத் தவறாக வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தி தனியார் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று (12.03.2019) அளித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

கோயிலை வழிபாட்டு இடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ஆன்மிக நெறி மட்டுமின்றி, ஆகம விதியும் இந்திய சட்ட முறைமையும் ஆகும்.

இவை அனைத்தையும் துச்சமாக மதித்து தில்லை நடராசர் ஆலய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆகம விதிகளுக்குப் புறம்பாக ஆயிரம்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம் நிகழ்த்த தனியாருக்கு காசுக்காக வழங்கியிருப்பது ஆன்மிக அன்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் வரலாற்று உணர்வாளர் களுக்கும் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டதாக அமைகிறது.

பக்தர்கள் மற்றும் பொது மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி, மக்களிடையே அமைதிக் குலைவை ஏற்படுத்தியக் குற்றத்திற்காக சிதம்பரம் நடராசர் ஆலய பொது தீட்சிதர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

ஏற்கெனவே தில்லைக் கோயில் தீட்சிதர்கள் நடராசர் ஆலய வளாகத்திற்குள் சாராயம் குடிப்பது, சூதாட்டம் நடத்துவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட தீட்சிதர்கள் முயன்றதை அண்மையில்தான் பக்தர்கள் தலையிட்டுத் தடுத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டிய பெரும் குற்றச் செயலில் தீட்சிதர்கள் இப்போது ஈடுபட்டு உள்ளார்கள்.

தொடர்ந்து தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தால் அது அனைவருக்கும் பொதுவான ஆன்மிகத் தளமாக இல்லாமல் தனியார் மண்டபம் போல் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தீட்சிதர்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீட்சிதர்களின் தனி உடைமை அக்கோயில் எனச் சொல்வதாகாது!

எனவே, வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆன்மிகர்களின் நெஞ்சில் நிறைந்த சிதம்பரம் நடராசர் ஆலயத்தை புனிதமான வழிபாட்டிடமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உடனடியாக சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response