ஸ்டாலின் என்று பிறமொழிப் பெயர் எதனால்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில், பெரம்பூர் வாத்தியார் என்று அழைக்கப்படும் அ.சிதம்பரத்தின் சகோதரர் கலைவாணனின் இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது….

மணமகனின் பெயர் முத்துவேல். தமிழ்ப்பெயர். ஆனால், மணமகளின் பெயர் ஆசிகா இது தமிழ்ப் பெயரா என்பது கேள்விக்குறிதான்? நான் விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

ஆனால், அதே நேரத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு தமிழ்மொழிக்கும் நம்முடைய இனத்திற்கும் சோதனை வரக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட இக்கட்டான காலகட்டத்திலாவது நம்முடைய குடும்ப வாரிசுகளுக்கு, நமக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும்.

இவ்வளவு சொல்கிறாயே மு.க.ஸ்டாலின், என்ற பெயர் என்ன தமிழ்ப்பெயரா? என்று சிலர் கேட்கலாம். சோவியத் ரஷ்ய நாட்டின் அதிபராக விளங்கிய கம்யூனிஸ்டு இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் மறைந்த நேரத்தில் நான் பிறந்த காரணத்தால், நம்முடைய தலைவர் கருணாநிதி அந்தப் பெயரை எனக்கு வைத்தார். காரணம், தலைவர் கருணாநிதிக்கு கம்யூனிச கொள்கையின்மீது அளவு கடந்த பற்று உண்டு. எனவே, அந்த உணர்வோடு ஸ்டாலின் என்ற பெயரை எனக்கு சூட்டினார்.

அதேபோல் தலைவர் கருணாநிதியின் ஆசானாக விளங்கியவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. மேடையில் இவ்வளவு வீராவேசமாக பேசுகிறேன் என்றால், அதற்கு பட்டுக்கோட்டை அழகிரிசாமி தான் காரணம் என்று தலைவர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். எனவே, அவரின் நினைவாக அழகிரி என்ற பெயரை என்னுடைய இரண்டாவது அண்ணனுக்கு வைத்தார்கள்.

நான் சட்டமன்ற உறுப்பினராக 1989 இல் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கமிட்டி மூலமாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவில் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது, ரஷ்ய நாட்டிற்கு போயிருந்தபோது ஸ்டாலின் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தை வினோதமாக பார்த்தார்கள். விமான நிலையத்தில் கூட பாஸ்போர்ட்டை சோதனை செய்து என்னை உள்ளே அனுப்பும் நேரத்தில் அவ்வளவு கேள்விகள் கேட்டு சங்கடம் கொடுத்தார்கள். ஏனென்றால், ஸ்டாலின் என்ற பெயருக்கு அவ்வளவு பிரச்சினை அங்கு.

இங்கு திருமணமாகாதவர்களும் வந்திருப்பார்கள். விரைவில் திருமணம் முடிக்க இருப்பவர்களும், விரைவில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் இருப்பவர்களும் வந்திருப்பீர்கள். எனவே, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக அடுத்த வருடமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதில் அவசரம் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தை பெற்றுக்கொள்ளும் நேரத்தில் அதுபோன்று ஒரு நிலையை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் அன்பான வேண்டுகோளை எடுத்துவைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response