சென்னை தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்க வழி சொல்லும் பெ.மணியரசன்

கிருஷ்ணா நீர் பெறாமல் மேட்டூர் நீரைக் காலி செய்வதுதான் தீர்வா? என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்கொடிய தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, அனைத்துப் பகுதி மக்களும் தவிக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (18.06.2019) வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்குஓராண்டுக்கு ஆந்திராவின் கிருஷ்ணா ஆற்றிலிருந்து வர வேண்டிய 12 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீரில் 2 ஆ.மி.க.தான் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னைக் குடிநீருக்காக தமிழ்நாடு அரசுப் பணத்தில் வெட்டப்பட்ட தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் தமிழ்நாட்டு எல்லைக்கு அருகில் ஆந்திரத்திலுள்ள கண்டலேறு நீர்த்தேக்கத்தில் 4.5 ஆ.மி.க. தண்ணீர்தான் உள்ளது என்றும், 8.5 ஆ.மி.க. தண்ணீர் இருந்தால்தான் சென்னைக்குக் குடிநீர் திறந்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

கடந்த (2019) சனவரி மாதத்திலிருந்து சென்னைக்குப் பெற வேண்டிய தண்ணீரை தமிழ்நாடு அரசு, ஆந்திர அரசிடமிருந்து வலியுறுத்தி ஏன் பெறவில்லை? மொத்தம் ஓராண்டிற்குப் பெற வேண்டிய 12 ஆ.மி.க.வில் வெறும் 2 ஆ.மி.க.வே பெற்றிருப்பது, தமிழ்நாடு அரசின் அலட்சியத்தைக் காட்டுகிறது.

ஆந்திர அரசு தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி சென்னைக்குரிய 12 ஆ.மி.க. தண்ணீரைத் தர மறுத்து வருகிறது. மிக அதிக அளவாக ஓராண்டில் 3.5ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் சென்னைக்கு வந்துள்ளது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கிருஷ்ணா நீர் சிறீசைலம் நீர்த் தேக்கத்திலிருந்து கண்டலேறு அணைக்கு வருகிறது. இப்பொழுது இன்றைய நிலையில் சிறீசைலம் நீர்த் தேக்கத்தில் 32.24 ஆ.மி.க. தண்ணீர் இருக்கிறது. இதிலிருந்து ஒரு 5 ஆ.மி.க.தண்ணீரைத் தமிழ்நாடு அரசு கேட்டுப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரும், ஆந்திரத்தில் என்.டி. இராமாராவும் முதலமைச்சராக இருந்தபோது, சென்னைக் குடிநீருக்காக “தெலுங்கு கங்கை ஒப்பந்தம்” போடப்பட்டு, இந்தியத் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்களால் அத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தெலுங்கு கங்கை கால்வாயில் சென்னைக்கு வரும் குடிநீரை ஆந்திர விவசாயிகள் சட்ட விரோதமாக பம்ப் செட் வைத்து, தங்கள் வேளாண் பணிகளுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சட்ட மீறலை தமிழ்நாடு அரசால் ஏன்தடுக்க முடியவில்லை?

கிருஷ்ணா நீரைப் பெறுவதில் அக்கறை செலுத்தாமல், மேட்டூரின் காவிரி நீரைக் காலி செய்வதில் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதம் ஆகியவற்றில் வேளாண்மைக்குத் திறந்துவிடுவதைப் போல குடிநீருக்கென்று 8,000 கன அடி, 6,000 கன அடி, 2,000 கன அடி என்று பல தவணைகளில் மேட்டூர் அணையைத் திறந்து விட்டார்கள். அதிலிருந்து தொடர்ந்து 1,000 கன அடி தண்ணீர்சென்னை குடிநீருக்காகத் திறக்கப்படுகிறது.

68 அடி உயரத்திற்கு தேங்கியிருந்த மேட்டூர் அணையின் தண்ணீரை, இன்றைய அளவில் 44 அடியாகக் குறைத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

இதே அளவில் தண்ணீர் எடுத்தால் விரைவில் மேட்டூர் அணையில் சேறுதான்மிஞ்சும். மீன்கள் செத்து மிதக்கும்! இது போதாதென்று வேலூர் மாவட்டத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய் வழியாகச் செல்லும் தண்ணீரை பீப்பாய்களில் சென்னைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 பீப்பாய்களில் சோலார்பேட்டையிலிருந்து தொடர்வண்டியில் சென்னைக்குத் தண்ணீர் கொண்டு போக ஏற்பாடு நடக்கிறது.அதாவது, ஒரு நாளைக்கு 25 இலட்சம் லிட்டர் தண்ணீர் மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வழியாகக் கொண்டு செல்லப்போகிறார்கள்.

இந்தத் தீவிரத்தில், பத்தில் ஒரு பங்கு தீவிரத்தை கிருஷ்ணா நீரைப் பெறுவதில் தமிழ்நாடு அரசு காட்டியிருக்கலாம்; ஆந்திர அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

உலக நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்வதற்கான கார்களையும், கனரக உந்துகளையும், பன்னாட்டு நிறுவனங்கள் சென்னையில் தயாரிக்கின்றன. பாலாற்றின் ஊற்று நீரை அவை காலி செய்கின்றன. காவிரி நீரையும் அவை காலி செய்கின்றன. நிலப்பரப்புக்கும் மக்கள் தொகைக்கும் விகிதப் பொருத்தமில்லாத வகையில் மிக அதிகமாக பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் நிறுவிட அனுமதித்ததன் மூலம்சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் நமது நிலத்தடி நீர் வளத்தை அவை வேகமாகக் காலி செய்து வருகின்றன.

இந்த அபாயம் குறித்து, தமிழ்நாடு ஆட்சியாளர்கள் கணக்கிலெடுத்தார்களா? கவலைப் பட்டார்களா? இனிமேலாவது இதில் திருத்தம் செய்வார்களா? மிகையாக உள்ள பன்னாட்டுத் தொழிற்சாலைகளையும், வெளி மாநிலவணிக நிறுவனங்களையும் வெளியேற்ற வேண்டும்!

ஆனால், மேலும் மேலும் பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு மாநாடு நடத்துகிறது. இந்நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில்சென்னையில் மனிதர்கள் வாழக்கூடிய நிலை இருக்குமா என்பது கேள்விக் குறியே!

இவற்றையெல்லாம் சிந்தித்து, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். ஆண்டுக்கு 12 ஆ.மி.க. தண்ணீரை ஆந்திராவின் கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஒப்பந்தப்படி சென்னைக்குப் பெற வேண்டும்.

இவ்வாறு பெ.மணியரசன் கூறியுள்ளார்.

Leave a Response