2019 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2 ஆவது நாளாக நடந்தது. நேற்று 313 உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் இன்று பாராளுமன்றத்தில் பதவி ஏற்று முடித்ததும், தங்களுக்கு பிடித்தமான தலைவர்களின் பெயர்களை சொல்லி வாழ்க என்று குறிப்பிட்டனர்.
தமிழக உறுப்பினர்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்று முழக்கம் எழுப்பினார்கள். சிலர் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்களும் தி.மு.க. உறுப்பினர்களைப் போல தமிழ் வாழ்க என்று கூறினார்கள். கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பதவியேற்றதும் உலக தமிழர்களே ஒன்று கூடுங்கள் என்று முழக்கமிட்டனர்.
தமிழ் வாழ்க என்று தமிழக உறுப்பினர்கள் சொன்னபோதெல்லாம் பாரதீய ஜனதாவினர் பாரத் மாதாகீ ஜே என்று சத்தமிட்டனர்.ஆனால் இந்த எதிர்ப்பை தமிழக உறுப்பினர்கள் மதிக்கவே இல்லை.
இந்தியா முழுக்க இந்தி என்கிற பாஜகவின் திட்டத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக உறுப்பினர்கள் நடந்து கொடனர். இதனால் தில்லியில் போர் தொடங்கிவிட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.
அ.தி.மு.க.வின் ஒரே உறுப்பினரான ரவீந்திரநாத் குமார் பதவி ஏற்று முடித்ததும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க, புரட்சித் தலைவி அம்மா வாழ்க, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்று குறிப்பிட்டார்.
தூத்துக்குடி தொகுதி தி.மு.க. உறுப்பினர் கனிமொழியும் தமிழிலேயே பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் உறுதி மொழி எடுத்து முடித்ததும் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, பழனி மாணிக்கம் மற்றும் நவாஷ்கனி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
வசந்தகுமார் பதவி ஏற்று முடித்ததும் ஜெய் ஜவான், ஜெய் கிஷான், பெருந்தலைவர் காமராஜர் வாழ்க, ராஜீவ்காந்தி வாழ்க என்று கூறினார்.
மக்களவையில் தமிழக உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் #தமிழ்வாழ்க ஹேஷ்டேக் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றதற்கு தமிழகம் முழுக்க வாழ்த்து மழை பொழிகிறது.