அண்மையில் இயக்குநர் பா.இரஞ்சித் உரை தொடர்பாக பல விவாதங்கள் நடந்துவருகின்றன. அவர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் , தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த வே.பாரதி இது பற்றிக் கூறியிருப்பதாவது…..
தோழர் இரஞ்சித் அண்மையில் பேசி விவாதத்திற்கும் வழக்கிற்கும் உள்ளாகியிருக்கும் உரையைக் கேட்டேன். தனது உரையில் பல செய்திகளைத் தொடுகிறார். அவர் பேச்சுக்குள்ளேயே நிறைய முரண்கள் வெளிப்படுகின்றன. அதில் அவருக்கே மாறான விடைகளும் ஒளிந்து கொண்டுள்ளன.
ராசராசசோழன் குறித்து அவர் பேசுவதற்கு அடிப்படை… உமர் பாரூக் அவர்கள் குறித்த நிகழ்வு அது. அவர் எழுதிய நூலில் நிலம் குறித்தும் தலித் மக்களின் உரிமை குறித்தும் பேசப்பட்டுள்ளது. உமர்பாரூக் அவர்கள் நில உரிமை மீட்புக்கு திமுக அதிமுகவையே மாறி மாறி எதிர்த்துப் போராடியுள்ளார். அப்படி சில உண்மைகளையும் வலிகளையும் உரக்கச் சொல்கிறார். இவற்றைத் தொட்டுப் பேசும் போது ராசராசன் குறித்து அவரின் கருத்துகளை முன்வைக்கிறார்.
இராசராசன் குறித்தும் தமிழ்த்தேசியம் குறித்தும் அவர் பேசியதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. இன்னும் சொன்னால் சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அவர் கருத்துகள் மறுக்கப்பட வேண்டியவை என்பது இங்கே மிக முக்கியமானது. இரஞ்சித் பேசியதையெல்லாம் அப்படியே ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதல்ல கேள்வி! அப்படியே வைத்துக் கொள்வோம். நேரமெடுத்து விவாதிப்போம். பொறுத்து நானும் எழுதுவேன்.
ஆனால் கருத்து எதுவானாலும் நம் கொள்கைக்கு எதிரானதென்றானாலும் அதைப் பேசும் உரிமை இரஞ்சித்துக்கு உண்டு என்பதை மட்டும் ஒளிவுமறைவின்றி உரக்கச் சொல்வோம்.
கலவரத்தைத் தூண்டும் விதமாக… சாதி மதம் சார்ந்து இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசியது… என 153, 153A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கனிமொழி குறித்து எச்.ராஜா பேசிய போதும்… பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசிய போதும் என்ன செய்து கொண்டிருந்தது காவல்துறையும் அரசும். உயர்நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசிய போது ராசாவின் மீது இப்படி வழக்குப் போடத் துப்பில்லை! இப்போது வந்துவிட்டார்கள்.
சாதிச் சங்கங்கள் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளில் குறிப்பிட்ட சாதி சொல்லி வெட்டுவோம் கொல்லுவோம் என்று தலித்துகளை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படையாகப் பேசிய சாதி வெறி மிருகங்கள் மீது இப்படியாக ஒரு வழக்குப் பதிந்ததாகக் கூட செய்தி இல்லையே! அப்படிப் பேசியவற்றுக்கு நிறைய சான்றெடுத்துக் காட்ட முடியும். இப்படி ஒரு வார்த்தை கூட இரஞ்சித்திடம் வெளிப்படவில்லையே. அவர் பேசியது அத்துனையும் கருத்துகள்…. அவரின் பார்வை அவ்வளவுதான்.
இரஞ்சித்தின் கருத்துகளில் பல இடங்களில் அடியோடு மாறுபடுகிறேன். ஆனால் அவரின் கருத்துரிமைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.