வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல்,தமிழகத்தை நோக்கி வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அது திசைமாறி ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு .உள்ளனர்.
மீட்புப் பணிக்காக கடற்படை, விமானப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல் கரை கடக்கும்போது மணிக்கு 200 கிமீ வேகத்துக்கு மேல் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான பானி புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது.
இது ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி, அங்குள்ள பூரிக்கு தென்மேற்கே 430 கிமீ., ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 225 கிமீ. தூரத்தில் புயல் நிலை கொண்டிருந்தது.
இது, இன்று பகலில் பூரி அருகே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 200 கிமீ.க்கு பலத்த காற்று வீசும். மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலால் ஒடிசாவின் கடலோர பகுதிகளில் உள்ள 11 முதல் 16 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கும் என தெரிகிறது. எனவே, இப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் 11 லட்சம் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஒடிசாவுக்கு இன்று இயக்கப்பட இருந்த 223 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-சென்னை, சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், டெல்லி- புவனேஷ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் ஒடிசா மாநிலமே நடுக்கத்தில் உள்ளது என்கிறார்கள்.