நெல் ஜெயராமன் யார்? அவருக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி?

ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.

9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார்.

நஞ்சில்லா உணவை முன்னிறுத்தி 2003 இல் பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நம்மாழ்வார் நடத்திய விழிப்புணர்வு நடைபயணத்தில் ஜெயராமன் பங்கேற்றார்.

அந்தப் பயணத்தின்போது, காட்டுயாணம் உட்பட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அன்று முதல் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, அவற்றை மீட்டெடுக்கும் பயணத்தை ஜெயராமன் தொடங்கினார்.

இதுவரை 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் அமெரிக்காவில் வசிக்கும் நரசிம்மன் என்பவர் வழங்கிய 5 ஏக்கர் நிலத்தில், ஜெயராமனால் பாரம்பரிய நெல் மையம் உருவாக்கினார். இந்த மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் ஒரு ஆய்வு மையமாக திகழ்கிறது இவர் பாரம்பரிய நெல்விதைகளை விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்கிறார். விதைப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை உட்பட்ட வேளாண் விடயங்கள் தொடர்பாக பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டார்.

பாரம்பரிய நெல் விதைகளான யானைக்கவுனி, கருங்குருனை உள்ளிட்ட150-க்கும் மேற்பட்ட பண்டைய கால பாரம்பரிய நெல் வகைகளைக் கண்டறிந்து அதனை தனது பண்ணையில் விளைவித்தவர். இதனால் அவர் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.

நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு 1 கிலோ பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கி, அதனைப் பெற்றுச் செல்லும் விவசாயிகள் தனது நிலத்தில் விதைத்து இயற்கை தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்து மறு ஆண்டு நெல் திருவிழாவின் போது 4 கிலோவாக இலவசமாகவே திரும்பப் பெற்று அதனை புதிய 4 விவசாயிகளுக்கு இலவசமாகவே சுழற்சி முறையில் வழங்கி வந்தார்.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் ஈடுபட வைத்து உற்பத்தியைப் பெருக்கி சந்தைப்படுத்தியதின் மூலம் உலகத்தின் பார்வையை காவிரி டெல்டாவின் பக்கம் திரும்ப செய்த பெருமை நெல் ஜெயராமனுக்கு உண்டு.

நெல் ஜெயராமனின் சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் கவுரவித்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள், நண்பர்கள், விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தமிழர்கள் எனப் பலரும் நேரில் சந்தித்தும், அவரது சிகிச்சைக்கு உதவினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவரை சென்னைக்கு அழைத்து வந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் உடல் நிலை நேற்று மாலை மோசமடைந்தது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளன.

50 வயதாகும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

Leave a Response