119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
அங்கு தற்போது ஆட்சியிலிருக்கும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாக முயல்கிறது. முதலமைச்சர் கே.சந்திரசேகரராவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும், தெலுங்குதேசம் கட்சியும் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி, அவருக்குப் போட்டியாக அமைந்துள்ளது.
இன்னொரு பக்கம் பாரதீய ஜனதா கட்சியும் ஆட்சியைப் பிடிக்க ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில் அங்கு காங்கிரசுக் கூட்டணி சார்பில் பரப்புரை செய்து வருகிறார் நடிகை விஜயசாந்தி. தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர்,
சந்திரசேகரராவும் மோடியும் தனித்தனியாக இருப்பது போலக்காட்டிக் கொள்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் ரகசிய உறவு இருக்கிறது.
அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால் எங்களைப் போல் வெளிப்படையாகக் கூட்டணி வைத்திருக்கவேண்டும். மத்தியில் மோடியையும் மாநிலத்தில் சந்திரசேகரராவையும் தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் என்றார் ஆவேசமாக.
முன்னதாக ராகுல் காந்தி, தெலுங்கானா தேர்தலையொட்டி டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் மற்றொரு அணி (‘பி’ டீம்), சந்திரசேகரராவ் பிரதமர் மோடியின் தெலுங்கானா ரப்பர் ஸ்டாம்ப்” எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.