கஜா புயல் பாதிப்பு – காவிரி உரிமை மீட்புக் குழுவின் 5 முக்கிய கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழுவின் அவசரச் செயற்குழுக் கூட்டம், இன்று (24.11.2018) காலை தஞ்சை – தமிழ்த்தேசியப் பேரியக்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் ஐயனாவரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர்
த.மணிமொழியன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, விடுதலைத் தமிழ்ப்புலிகள் முரளி, தமிழர் தேசிய முன்னணித் துணைப் பொதுச் செயலாளர் சதா. முத்துக்கிருட்டிணன், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.சு. முனியான்டி, பி. முருகையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் துணைத் தலைவர் இராம சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, “கசா” புயலால் இறந்த மக்களுக்கும், தஞ்சை மாவட்டம் – சோழகன்குடிகாடு அருகிலுள்ள ஆவுடையநல்லுர் பகுதியில், “கசா” புயலால் சேதமடைந்த தனது தென்னை மரங்களைக் கண்டு வேதனையடைந்து, நஞ்சருந்தி மாண்ட உழவர் சுந்தர்ராஜ் அவர்களுக்கும், திருச்சி மாவட்டம் – திருவானைக்காவல் அருகிலுள்ள மேலகொண்டையம்பேட்டையில், “கசா” புயலால் சேதமடைந்த தனது வாழைத் தோப்பைக் கண்டு வேதனையடைந்து தொடர்வண்டி முன்பு பாய்ந்து தற்கொலையுண்ட இளைஞர் செல்வராசுக்கும் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசுக்கு பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.

1. “கசா” புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை தமிழ்நாடு அரசு, பேரிடர் பாதித்த மாவட்டங்களாக உடனடியாக அறிவித்து, இராணுவத்தைக் கொண்டு மீட்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

2. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை போதுமானது அல்ல! எனவே, புயலால் சேதமடைந்துள்ள தென்னை மரங்கள் ஒவ்வொன்றுக்கும் 6,000 ரூபாயும், நெல் பயிரிட்ட வேளாண் நிலங்கள் ஏக்கர் ஒவ்வொன்றுக்கும் 30,000 ரூபாயும், வாழை மரங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூபாய் 250-ம் இழப்பீடு வழங்க வேண்டும்.

3. “கசா” புயல் சேதங்களுக்காக தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் கேட்டுள்ள 14,910 கோடி ரூபாயை, இந்திய அரசு முழுவதுமாக வழங்க வேண்டும்.

4. புயல் பாதித்த மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகளின் வழியே ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

5. புயல் பாதித்த மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள வேளாண் மற்றும் தொழில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழக உழவர்கள் ஒன்றுபட்டு நின்று, மேற்கண்ட கோரிக்கைகளை போராடிப் பெற்றால், நிச்சயம் நம் இழப்பீடுகளை ஈடு செய்ய முடியும்! எனவே, உழவர்கள் யாரும் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று காவிரி உரிமை மீட்புக் குழு வேண்டுகோள் விடுக்கிறது!

“காவிரி உரிமை மீட்புக் குழு” சார்பில் துயர் துடைப்புப் பணிகளுக்காக பொருட்கள் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Response