கஜ புயலால் தத்தளிக்கும் நேரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு செய்த அநீதி

தமிழகமும், தமிழக அரசும் கஜ புயலினால் ஏற்பட்ட பேரிடரை கையாண்டுகொண்டிருக்கும் நேரத்தில், தமிழக அமைச்சரவையை சேர்ந்த எந்தப் பிரதிநிதியும் கலந்துகொள்ளாமல், ஊடகத் துறையினர் யாரையும் அழைக்காமல் கூடங்குளத்தில் 5 & 6 உலைகளுக்கு அவசர அவசரமாக துவக்கவிழா நடத்துவது ஏன்?.

இதைப்போன்றே மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் குன்றி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் 3 மற்றும் 4 உலைகளுக்கு கோவாவிலிருந்து இந்தியப்பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புட்டினும் அடிக்கல் நாட்டி வேலையை துவக்கி வைத்தார்கள்.

கஜ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கையாளுவது மாநில அரசுதான், இதைப்போலவே அணு உலைகளில் விபத்து ஏற்பட்டாலும் அந்த பேரிடரை கையாளப்போவது மாநில அரசுதான். இந்த சூழலில் இன்றைக்கு 5 மற்றும் 6 உலைகளுக்கு துவக்கவிழா நடத்தவேண்டியது ஏன்?

ஏற்கனவே முதல் இரண்டு உலைகளும் தத்தளித்துக்கொண்டிருக்கையிலும், அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் மேலும் உலைகளை அமைக்கவேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது?

தமிழக அரசு இந்த விஷயத்தில், குஜராத் முதலமைச்சர் அறிவித்ததுபோல் இனிமேல் புதிய அணு உலைகளை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவிக்கவேண்டும். இதற்காக தமிழக மக்களும், தமிழகத்திலுள்ள அரசிய கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Response