44 ஆண்டுகளில் 50 விழுக்காடு மாங்குரோவ் காடுகள் அழிந்தன – அதிர்ச்சி அறிக்கை

1970 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் மனிதர்களின் அதிகமான நுகர்வாலும், செயல்பாடுகளாலும் உலகில் உள்ள முதுகெலும்புள்ள பிராணிகளான பறவைகள், பாலூட்டிகள், மீன், நீர், நிலத்தில் வாழ்வன, ஊர்வன ஆகியவற்றின் எண்ணிக்கை 60 விழுக்காடு குறைந்துவிட்டது என்று உலக வனஉயிரி நிதியம் (WWF)) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தி லிவிங் பிளானட் ரிப்போர் ஆப் தி குளோபல் பண்ட் ஃபார் நேச்சுர் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக 1970 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்குள் இருக்கும் 4,005 வகை உயிரினங்கள் உள்ளிட்ட 16 ஆயிரத்து 704 விலங்குகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

டபிள்யு டபிள்யு எப் அமைப்பு பூமி குறித்தும், விலங்குகள் குறித்தும் வெளியிட்ட 12 ஆவது ஆய்வறிக்கை இதுவாகும். கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பூமியின் சுற்றுச்சூழல், வாழும் சூழல், பூமியின் நிலை ஆகியவை மனிதர்களின் செயல்பாடுகளில் வேதனை கொள்ளும் நிலையில் கெட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட விலங்குகளில் மனிதர்களின் நடவடிக்கையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது நன்னீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகிறது. அதாவது, கடந்த 44 ஆண்டுகளில் 83 சதவீத நன்னீர் உயிரினங்கள் மனிதர்களின் நடவடிக்கையாலும், செயல்பாடுகளாலும், நுகர்வாலும் அழிந்துவிட்டன. 20 நூற்றாண்டில் உலகில் மிக அதிகபட்ச அழிவை முதுகெலும்புள்ள பிராணிகள் சந்தித்துள்ளன.

அதிலும் குறிப்பாக வெப்ப மண்டலங்களில் வாழும் உயிரினங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழும் முதுகெலும்புள்ள உயிரினங்கள் எண்ணிக்கை 89 சதவீதம் குறைந்துவிட்டது.

இந்த பல்லுயிர்ச் சூழல் மிக மோசமாகக் கெட்டுப்போவதற்கு முக்கியக் காரணம் மனிதர்களின் நடவடிக்கை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு இல்லாத தன்மையில் மனிதர்களின் உணவுப்பழக்கம் போன்றவை சூழியல்அமைப்பைச் சுரண்டி, சீரழித்தமைக்கு முக்கியப் பொறுப்பாகும்.

வேளாண்மையில் அதிக அளவு வேதிப்பொருட்கள் கலத்தல், மக்கள் தொகை அதிகரிப்பு, உயிரினங்கள் படையெடுப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபிள்யு டபிள்யு எப் சர்வதேச அமைப்பின் இயக்குநர் தலைவர் மேக்ரோ லாம்பர்டினி கூறுகையில், ’’தற்போது நடைமுறையில் உள்ள நிலையில்லாத உற்பத்தி முறை, வீணாகும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் தாக்கத்தை நாம் நீண்டகாலத்துக்குப் புறந்தள்ளிவிட முடியாது. இயற்கை நம் கண்முன்னே அழிந்து கொண்டு இருப்பதைத் தடுக்க வேண்டும்.

கடந்த 44 ஆண்டு காலத்தில் அமேசான் காடுகளில் 50 சதவீத மாங்குரோவ் காடுகள் அழிந்துவிட்டன. பூமியில் உள்ள பவளப்பாறைகள் பாதி அளவாகக் குறைந்துவிட்டது. இந்த அழிவு என்பது மனிதர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகும்.

ஆதலால், இயற்கையை நாம் இனி கவனத்துடன் எவ்வாறு வருங்காலத்துக்கு பயன்படுத்தப் போகிறோம் என்பதை மிக அவசரமாக மறுசிந்தனை செய்ய வேண்டிய நேரமாகும். இயற்கை என்பது நம்முடைய அத்தியாவசிய சொத்து. ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுமட்டும் நமக்குத் தெரியும்.

உலக வெப்பமயமாதலில் தற்போதுள்ள 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குப் பராமரித்தாலே எதிர்காலத்தில் மிகுந்த ஆபத்தாக முடியும். இதைக் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் மனிதர்களின் வாழும் சூழல் வருந்தக்கூடிய நிலைக்குச் செல்லும்.

மனிதர்களால் உருவாகும் காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வாழிடும் சுருங்குதல், மாசு, சட்டவிரோத வணிகம் ஆகியவை தடுக்கப்பட வேண்டும்

இவ்வாறு மேக்ரோ லாம்பர்டினி தெரிவித்தார்

Leave a Response