மேட்டூர் அணை நிரம்பியது – குடும்பம் குடும்பமாக மக்கள் கூட்டம்

1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டிமுடிக்கப்பட்ட மேட்டூர் அணையானது 39-வது முறையாக முழுக்கொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியில் இருந்து திங்கள்கிழமை நண்பகல் 12 மணி முதல் 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 70,000 கனஅடியாக இருக்கும் நிலையில், இன்றிரவுக்குள் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சேலம், ஈரோடு, நாமக்கல் உள்பட காவிரி பாயும் 12 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர் எந்நேரமும் மீட்புப் பணிகளுக்கு தயாராக இருக்கும்படி உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத் துறையினர் காவிரி கரையோர கிராமங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி கரையோரங்களில் வசித்து வந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அணை நிரம்பியதையொட்டி ஈரோடு, சேலம் மாவட்ட மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று அணையைப் பார்த்து மகிழ்கின்றனர்.

Leave a Response