பவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி

உலகப் புகழ் பெற்றது பவானி ஜமக்காளம். அந்தத் தொழில் செய்யும் நெசவாளர்கள் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. யாரும் கவனிக்காத அவர்களைப் பற்றிப் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா.

தமிழ்நாட்டில் திருப்பூர் மக்களவைத் தொகுதியில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்க பவானி ஜமக்காளத்தை சரக்கு மற்றும் சேவை வரிவிலக்கு பெறும் கைத்தறித் தரை விரிப்புகளுடன் சேர்க்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி ஜூலை 19 அன்று அவர் பாராளுமன்றத்தில் பேசியதாவது….

தமிழ்நாட்டில் திருப்பூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கிய பவானி பகுதியில் பாரம்பரியமாக கைத்தறி நெசவாளர்களால் கையால் நெய்யப்படும் பிரசித்தி பெற்ற ஜமக்காளத்தை பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலாவதற்கு முன் பவானி ஜமக்காளத்துக்கு அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி அமல் செய்யப்பட்ட பிறகு வரி விலக்குப் பெறும் பொருட்களின் பட்டியலில் பவானி ஜமக்காளம் இடம்பெறவில்லை.

இந்த அரிய படைப்பு தரைவிரிப்பு பொருட்களின் வகை சார்ந்ததா என்பது பற்றி பெரிய குழப்பம் நிலவுகிறது. கடந்த 300 ஆண்டுகளாக பவானி பகுதி வாழ் நெசவாளர்களால் பாரம்பரியமாக்க கையால் நெய்யப்பட்டு வரும் படைப்பாகும்.

இது ஒரு குடிசைத் தொழிலாகும். இதனால் இந்தப் பகுதியைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலைவாய்ப்பையும் வாழ்வாதார உதவியையும் பெற்றுள்ளனர். எனவே ஜி.எஸ்.டியில் இருந்து இந்த அரிய பொருளுக்கு விலக்கு அளிக்கவேண்டியது அவசியம்.

எனவே பவானி ஜமக்காளத்தை உருவாக்குவதிலும் விற்பதிலும் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு பெறும் கைத்தறி தரைவிரிப்புகளில் பவானி ஜமக்காளத்தையும் சேர்க்குமாறு கோரி மத்திய வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

சத்யபாமாவின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டியிலிருந்து பவானி ஜமக்காளத்துக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்றும் இந்தக் கோரிக்கையை பாராளுமன்றத்தில் எழுப்பிய சத்யபாமாவுக்கு நன்றி என்றும் நெசவாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response