ஜிஎஸ்டியால் திரைத்துறைக்குப் பெரும் பாதிப்பு – ஆர்.கே.செல்வமணி வெளிப்படை

2017 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று நள்ளிரவில் பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டம் கூடியது. நள்ளிரவில் பாராளுமன்றம் கூடுவது சுதந்திர இந்தியாவில் அரிதினும் அரிதான நிகழ்வு. ஒரே தேசம், ஒரே வரி என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக GST என சுருக்கமாக அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த வரி விதிப்பு முறையால் இந்தியாவெங்கும் தொழில் நசிவு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தொடங்கும்போதே இதில் இருந்த பல்வேறு குறைபாடுகள் இன்னும் களையப்படாமலே இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இவை பற்றிக் கவலைப்படாமல் இந்த வரியை அறிமுகப்படுத்தி ஓராண்டு ஆகிறதென சொல்லி அதைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது பாரதிய சனதா கட்சி.

இந்நிலையில், இன்று பிக்பாஸ் சிக்கல் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து ஓராண்டாகும் நிலையில் இதுபற்றி உங்கள் கருத்தென்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், ஜிஎஸ்டியால் திரைத்துறைக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் நட்டத்துக்கு ஆளாகிறார்கள். ஒரு தயாரிப்பாளர் பாதிக்கப்பட்டால் அது அவரை மட்டுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் பாதிக்கும். இந்த ஜிஎஸ்டியால் எல்லாத் தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு, இதை நீக்க எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்யவேண்டும் என்றார்.

Leave a Response