காடுவெட்டி குரு மறைவில் எவ்வித மர்மமும் இல்லை – தங்கை மகன் விளக்கம்

பாமகவின் முன்னணியினரில் ஒருவரான காடுவெட்டி குரு அண்மையில் மரணமடைந்தார். அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் பரவிவருகின்றன. அவற்றிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் காடுவெட்டி குருவின் தங்கை மகன் மனோஜ்கிரண் எழுதியுள்ள பதிவு…..

——————-
“வதந்திகளை பரப்புவது மாவீரனுக்கு இழைக்கப்படும் அவமரியாதை”

மறைந்த மாவீரன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வாரப்பத்திரிகைகளிலும், பேஸ்புக் பதிவுகளிலும் சில நாட்களாக உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றில் துளியும் உண்மை இல்லை.

மாவீரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர் அய்யாவும், அன்புமணி அண்ணனும் மிகுந்த அக்கறை காட்டினார்கள். மாவீரனின் சிகிச்சைக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை… அவரைக் காப்பாற்றியாக வேண்டும் என்பதில் அவர்கள் இருவரும் உறுதியாக இருந்தனர்.

அதுமட்டுமின்றி சிகிச்சைக்கான கட்டணத்தையும் மருத்துவமனையில் அட்வான்சாக கட்டி சிகிச்சை அளிக்கச் செய்தனர். மாவீரனின் தங்கை மகன் என்பது மட்டுமின்றி, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது அனைத்து நாட்களும் மருத்துவமனையில் இருந்தவன் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன்.

மருத்துவர் அய்யா தினமும் இருமுறை என்னை தொடர்பு கொண்டு மாவீரனின் உடல்நிலை குறித்து விசாரிப்பார். எங்களுக்கு ஆறுதல் கூறுவார். அடிக்கடி சென்னை இல்லத்திற்கும், மருத்துவமனைக்கும் நேரில் வந்து நலம் விசாரித்தார். அன்புமணி அண்ணன் கடைசிவரை எங்களுடன் இருந்து சிகிச்சைகளை கவனித்துக் கொண்டார். உலகின் முன்னணி மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இந்த உண்மைகள் அனைத்தையும் மாவீரன் நம்முடன் இருந்த போதே முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

உண்மை இவ்வாறு இருக்க தவறான தகவல்களை பரப்புவது அய்யாவுக்கும், மாவீரனுக்கும் இடையிலான உறவையும், அன்பையும் கொச்சை படுத்தும் செயலாகும். மாவீரனுக்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். மாவீரன் மீது மரியாதையும், அன்பும் கொண்டவர்கள் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

தம்மைக் காப்பாற்ற மருத்துவர் அய்யா மேற்கொண்ட நடவடிக்கைகளையும், அவர் தம்மீது காட்டிய அக்கறையையும் முகநூலில் பதிவிட்டிருந்த மாவீரன் அவர்கள், எந்த வதந்திகளையும் நமது சொந்தங்கள் நம்பக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி அவர் மருத்துவமனையில் சுயநினைவுடன் இருந்தபோது கூறிய கடைசி வார்த்தை,‘‘ மருத்துவர் அய்யா அவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படியே நடந்து கொள்ளுங்கள்’’ என்பது தான். இவை அனைத்தும் சாட்சி நான் தான்.

மருத்துவர் அய்யா அவர்களின் தளபதியாக இருந்து நம்மை மாவீரன் வழிநடத்தினார். அவர் நம்மை விட்டு பிரிந்து விட்ட நிலையில், அவர் காட்டிய வழியில் மருத்துவர் அய்யாவையும், அன்புமணி அண்ணனையும் நாம் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். இதுவே மாவீரனின் தங்கை மகன் என்ற முறையிலும், அவர் மீது மரியாதை கொண்டவன் என்ற முறையிலும் நமது சொந்தங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோளாகும்.

இப்படிக்கு,
மனோஜ் கிரண்

வதந்திகளை பரப்புவது மாவீரனுக்கு இழைக்கப்படும் அவமரியாதைமறைந்த மாவீரன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து…

Posted by Manoj Kiran on Thursday, June 7, 2018

Leave a Response