தூத்துக்குடி படுகொலைகள், ஐநா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்

தூத்துக்குடி அரச வன்முறைக்கு ஐநா மனித உரிமை கண்டனம்.

ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள முழு அறிக்கை –

சட்டப்படியான மனித உரிமைகளையும் சுற்றுச்சூழலியல் சார்ந்த அச்சங்களையும் வெளிப்படுத்தும் நோக்கில் ஊர்வலம் சென்று கொண்டிருந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக தகவுப்பொருத்தமற்று, அத்துமீறிய வகையில் காவல் படையும், குறிப்பாக முழுத்திறத் தோட்டாக்களும் அப்பட்டமான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.

எந்தக் காலத்தாழ்வுமின்றி சுதந்திரமான, வெளிப்படையான புலனாய்வை நடத்த வேண்டும் என்றும், மனித உரிமை மீறல்கள் புரிந்தோரைப் பதிலளிக்கும் பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் இந்திய அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.

வணிகம், மனித உரிமைகள் பற்றிய ஐநா வழிகாட்டுக் கொள்கைகளின்படி, அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் மனித உரிமைகளை மதித்து நடக்கும் பொறுப்பு உள்ளது. மேலும், அவர்களால் ஏற்படும் மோசமான மனித உரிமைப் பாதிப்புகளுக்கு அவர்கள் எப்படி முகங்கொடுக்க வேண்டும் என்பதற்குரிய பொறுப்பும் அவர்களுடையதே.

வணிக நிறுவனங்கள் அனைத்தும் தேசத்தின், பன்னாடுகளின் மனித உரிமைகளுக்கும் சுற்றுச்சூழலியல் நெறிமுறைகளைக்கும் மதிப்பளிக்கின்றனவா என உறுதிசெய்யும் வகையில் அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நாங்கள் இந்திய அரசை வலியுறுத்துகிறோம். மேலும், ஸ்டெர்லைட் செம்பு உருக்குப்பிரிப்பு ஆலையானது பாதிக்கப்பட்ட சமூகத்திடம் பொருள்பொதிந்த கலந்துரையாடல்கள் நடத்திய பிறகுதான், இந்தியச் சுற்றுச்சூழல் விதிகளுக்கு முழுக்க ஒத்துப்போகும் நிலையை அடைந்த பிறகுதான் செயற்பாடுகளைத் தொடங்க வேண்டும்.

தமிழாக்கம் – நலங்கிள்ளி

Leave a Response