ஐபிஎல் – லோகேஷ் ராகுல் அதிரடியால் பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டி இந்தூரில் மே 6 இரவு நடைபெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நம்பிக்கை வீரர்களான சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரன் குவிக்க இயலவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் ஓரளவிற்கு அதிரடியாக விளையாடி 16 பந்தில் 24 ஓட்டங்கள் அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். இதில் தொடக்கத்திலேயே கெய்ல் (8) மற்றும் மயங்க் அகர்வால் (2) ஆகியோர் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப கருண் நாயர், லோகேஷ் ராகுலுடன் கை கோர்த்தார். இருவரும் மிக பொறுப்புடன் ஆடி பஞ்சாப் அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர்.

இந்நிலையில் ஆட்டத்தின் 10.5-வது ஓவரில் கருண் நாயர் (31 ஓட்டங்கள்), அனுரீத் சிங் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதையடுத்து வெறும் 4 ஓட்டங்களுடன் வந்த வேகத்தில் திரும்பிய அக்‌ஷர் படேல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

அடுத்ததாக மார்கெஷ் ஸ்டோனிஷ், லோகேஷ் ராகுலுடன் இணைந்தார். இருவரும் இணைந்து ராஜஸ்தான் அணியினரின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து 18.4-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டினர்.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 84 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a Response