ஐபிஎல் – சென்னையை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது.

சண்டிகரில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணித்தலைவர் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் கடந்த 2 போட்டியில் விளையாடாத கிறிஸ்கேல் இம்முறை லோகேஷ் ராகுலுடன் இணைந்து ஆட்டத்தை தொடங்கினார். இந்த ஜோடி தாறுமாறாக ரன் சேர்த்தது. டோனி தொடக்கத்திலேயே சுழல் பந்துவீச்சை களமிறக்க, கேல் சிக்சர்களை பறக்கவிட்டார். 22 பந்தில் அவர் அரைசதம் விளாச, பஞ்சாப்பின் ஸ்கோர் எகிறியது. 8 ஓவரில் 96 ரன் சேர்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் (37 ரன், 22 பந்து) விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தினார்.

ஆனாலும் அடுத்து வந்த அகர்வாலும் விளாச ரன் வேகம் குறையவில்லை. 10 ஓவரில் பஞ்சாப் அணி 115 ரன் குவித்தது. கேல் 63 ரன் (33 பந்து, 4 சிக்சர், 7 பவுண்டரி) எடுத்த நிலையில் வாட்சன் பந்தில் ஆட்டமிழக்க பஞ்சாப்பின் ரன் வேகம் குறைந்தது.

இம்ரான் தஹிர் 15வது ஓவரில் அகர்வால் (30), பிஞ்ச் (0) விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார். யுவராஜ் தன் பங்குக்கு 20 ரன் சேர்த்தார். கடைசி கட்டத்தில் கே.கே.நாயர் (29), கேப்டன் அஷ்வின் (14) ஓரளவுக்கு கைகொடுக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன் சேர்த்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் 11 ரன், முரளிவிஜய் 12 ரன், ராயுடு 49 ரன்னில் ஆட்டமிழந்தனர். டோனி 44 பந்தில் 79 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Response