விவசாயிக்காக ஏர்முனை நடத்திய போராட்டம் வெற்றி

பல்லாயிரம் கோடிகளைக் கடனாகக் கொடுத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் வங்கிகள் சாமான்யர்களிடம் சட்டப்பூர்வமாகப் பகல்கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம்.

திருப்பூரில், வாங்கிய கடனை வட்டியுடன் மொத்தமாகத் திருப்பிச் செலுத்திய பின்பும் மேலும் பணம் கட்டியாகவேண்டுமென்ற வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் வெற்றி கிடைத்துள்ளது.

என்ன நடந்தது? என்பதை விளக்கி ஏர்முனை இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

விவசாயிகளின் மின்கட்டணப் போராட்டத்தில் நடைபெற்ற பெருமாநல்லூர் துப்பாக்கிச் சூட்டில் தன் இன்னுயிரை தியாகம் செய்த உத்தம தியாகி மாரப்பகவுண்டரின் புதல்வர் சாமிநாதன் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மகீந்திரா நிதி நிறுவனத்தில் டிராக்டர் கடனாக ரூ 5,00,000 வாங்கியிருந்தார்.

அதற்கான வட்டியாக ரூ 2,13,040 சேர்த்து 16 தவணையில் முழுமையாகச் செலுத்திவிட்டார்.ஆனால் NOC கடிதம் கேட்டபோது குறிப்பிட்ட காலக்கெடுவில் கட்டவில்லை ஆதலால் அபராதமாக ரூ 81000 செலுத்தினால் தான் கொடுக்க முடியும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை அலைக்கழித்து வந்தனர்.

இன்று(17/03/18) மதியம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வங்கியை முற்றுகை செய்து நிர்வாகத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியதில் அபராத தொகையை முழுமையாக ரத்து செய்து NOC கடிதம் கொடுத்து விடுவதாக வங்கி மேலாளர் M.சம்பத் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி தலைமையில் மாநில தலைவர் என்.கே.டி.பொன்னுசாமி, துணைத்தலைவர் சண்முகம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கோவை மாவட்ட தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், தங்கவேல், ராசு,சண்முகசுந்தரம்,கோகுல் ரவி,ஜோதிபிரகாஷ்,சுசீந்திரன்,மோகன்ராஜ்,கொண்டசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response