46 ஆண்டுகளாக இல்லாத வழக்கமாக இந்தியைத் திணிக்கும் பாஜக, கொதிக்கும் மேகாலயா

மேகாலயா சட்டப்பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு, பிப்ரவரி 27,2018 அன்று நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 3 ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில், ஆளும் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

அதற்கு அடுத்தபடியாக, கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 19 இடங்களையும், அக்கட்சியின் கூட்டணியான பாஜக 2 தொகுதிகளையும் கைப்பற்றின. இருந்தபோதிலும், அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் (31 தொகுதிகள்) எந்தக் கட்சிக்கும் கிடைக் கவில்லை.

இந்நிலையில், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவின் முயற்சியால், என்பிபி தலைமையில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி (யுடிபி), மக்கள் ஜனநாயக முன்னணி (பிடிஎப்), மலையக மக்கள் ஜனநாயக கட்சி (எச்எஸ்பிடிபி) ஆகிய 3 கட்சிகளும் இணைந்தன. இதன் காரணமாக, ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களைக் காட்டிலும் அதிகமாக, 34 உறுப்பினர்களின் ஆதரவு என்பிபி கட்சிக்கு கிடைத்தது.

இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தாலும் அங்கே ஆளும் கட்சியாகச் செயல்படும் பாஜக அங்கு நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே தன் வேலையைக் காட்டிவிட்டது.

மேகாலயாவில் பல்வேறு உள்ளூர் மொழிகள் பேசப்படுகின்றன. எனினும் காரோ மற்றும் காஸி ஆகிய மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவையிலும் இந்த உள்ளூர் மொழிகளே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர பொது தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது.

அனைவருக்கும் எளிதில் புரியும் என்பதால் மேகாலயா சட்டப்பேரவையில் வழக்கமாக ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர்.

மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசு அரசு சமீபத்தில் பதவியேற்றது. அதன் பிறகு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மார்ச் 16 அன்று தொடங்கியது.

முதல் நாளில், ஆளுநர் கங்கா பிரசாத் இந்தியில் உரையாற்ற தொடங்கினார். அவரது உரையின் மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் முன்னதாக கொடுக்கப்பட்டது. ஆளுநர் இந்தியில் உரையாற்ற எதிர்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவும் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் முதல்வர் கான்ராட் சங்மா கூறுகையில் ‘‘இந்தி ஒன்றும் வெளிநாட்டு மொழியல்ல. ஆளுநருக்கு எந்த மொழியில் எளிதாக பேச முடியுமா அந்த மொழியில் பேசலாம். இதில் தவறு எதுவும் இல்லை’’ எனக்கூறினார்.

இதை ஏற்காத காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அமளிக்கு நடுவே, ஆளுநர் உரையாற்றி முடித்தார்.

பின்னர் காங்கிரஸ் உறுப்பினர், பி.டி சாக்மி பேசுகையில் ‘‘மாநிலம் உருவாகி 46 ஆண்டுகளில் எந்த ஒரு சட்டப்பேரவையிலும் ஆளுநரும் இந்தியில் உரையாற்றியதில்லை. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. எங்கள் அனைவருக்கும் தெரிந்த மொழியான ஆங்கிலத்தில் ஆளுநர் உரையாற்றலாமே. இந்தியில் உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மதம், ஒரே மொழி என்ற பாஜகவின் இலக்கை செயல்படுத்த சதி நடைபெறுகிறது’’ எனக்கூறினார்.

கங்கா பிரசாத் பிஹார் மாநில பாஜக மூத்த தலைவராக இருந்தவர். மேகாலயா ஆளுநராக தற்போது பதவி வகித்து வருகிறார்.

Leave a Response