ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீட்டின் விலை 20 கோடி

2018 -19 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 15,2018 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதை தாக்கல் செய்தார். அந்த நிதிநிலை அறிக்கை குறித்து, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2017-2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது வருவாய் பற்றாக்குறை 15 ஆயிரத்து 930 கோடி ரூபாயாக இருந்தது. அது இப்போது 17 ஆயிரத்து 491 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை 41 ஆயிரத்து 977 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, 44 ஆயிரத்து 481 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.14 லட்சம் கோடியாக இருந்த மாநில அரசின் கடன், இப்போது ரூ.3.55 லட்சம் கோடியை எட்டும் என கூறப்பட்டுள்ளது. கணிக்கப்பட்ட எண்ணிக்கையே இந்த அளவு இருக்கும் என்றால் உண்மையில் நிதியாண்டு முடியும்போது இந்த எண்ணிக்கை நிச்சயம் இதைவிட மோசமாகத்தான் இருக்கும் என்பது எதார்த்தமான உண்மை.

வழக்கமான “ஒப்பனை” அறிவிப்புகள் தவிர, ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவது மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கையின் ஒரே சாதனையாக இருக்கிறது. இதற்கென 50 கோடி ரூபாயும், ஜெயலலிதாவின் இல்லத்தை வாங்க 20 கோடி ரூபாயும் செலவிடத்தயாராக இருக்கும் இந்த அரசு, தமிழகம் முழுவதும் புதிதாக தீயணைப்பு நிலையங்களை அமைக்க வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.

நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, மிக மோசமான கடன் என்று அ.தி.மு.க. அரசு தமிழகத்தை கடும் நிதி நெருக்கடி பள்ளத்தில் தள்ளிவிட்டு, மாநில முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அபாய சங்கு ஊதியிருக்கிறது என்பதே இந்த நிதிநிலை அறிக்கையின் உரை என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response