திருப்பூர் சிறு குறு தொழில் நிறுவனங்களைக் காக்க களமிறங்கிய சத்யபாமா எம்பி

திருப்பூரில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தரவேண்டியுள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக அரசு விடுவிக்கவேண்டும் என்றும்,

ஜி.எஸ்.டி-ஐ ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் எளிதான வழிமுறையை வகுக்கவேண்டுமென்றும்,

ஆன்லைன் அல்லாத Manual நடைமுறைக்கு மாற்றாக அமைப்பு ரீதியிலான திருப்பியளிப்பு (ரீஃபண்ட்) நடைமுறையை வகுத்து சிரமங்களை அகற்றுமாறும்,

மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெய்ட்லியிடம் நேரில் கடிதம் கொடுத்துள்ளார் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா.

அவர் கொடுத்துள்ள கடிதத்தில்….

திருப்பூர் பின்னலாடை தொழில்துறை சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதிகளை செய்து வருகிறது. இவற்றில் 80 சதவிகிதம் சிறு குறு மற்றும் தொழில்நிறுவனங்கள் மூலமாக நடைபெறும் ஏற்றுமதியாகும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகோலுவதுடன் குறிப்பாக ஓரளவு படித்த கிராமப்புற பெண்கள் உட்பட பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை இந்தத் தொழில்துறை வழங்குகிறது.

நாட்டின் ஆயத்த பின்னலாடை ஏற்றுமதிகளில் 22 சதவிகிதமும் பின்னலாடை ஏற்றுமதியாளர்களில் 47 சதவிகிதமும் திருப்பூரை மையமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத் தீர்வைகளில் கிடைக்கும் சலுகைகள் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதற்கொண்டு திருப்பிஅளிக்கப்படாததால் இத்தகைய சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் பணத்தட்டுப்பாட்டில் உள்ளன.

ஜி.எஸ்.டியில் திருப்பி அளிக்கவேண்டிய தொகை, Duty Drawback விகிதம் ஆகியன வழங்கப்படாதது இந்த நிறுவனங்களின் மூலதன பணத்தட்டுப்பாட்டுக்கு காரணமாக உள்ளது.

இந்த எதிர்மறை காரணங்களால், புதிய ஏற்றுமதி ஆர்டர்களை சந்தைக்கான போட்டி விலையில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இந்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இல்லை என்பதும் குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளை டெலிவரி செய்ய முடியாது என்பதும் நிதர்சன நிலைகளாகும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் கணக்குகள் ஒன்று, சிறப்பு கவனம் தேவைப்படும் கணக்குகள் இரண்டு அல்லது வாராக் கடன் என்கிற வகைகளில் கடன்களை செலுத்தாத நிறுவனங்களை வகைப்படுத்த வங்கிகள் முயல்வது வேதனை அளிக்கிறது. திருப்பி அளிக்க முடியாத நிலையில் இந்த சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருப்பது அவற்றில் தவறு அல்ல.

மாநிலத்தீர்வையில் வழங்கப்படும் சலுகைகள், (ROSL), ஜி.எஸ்.டி திருப்பிஅளிப்பு, Drawback தொகை உரிய நேரத்தில் வழங்கப்படுவது என அனைத்தும் சரியாக கிடைத்திருந்தால் இந்த நிறுவனங்கள் உரிய நேரத்தில் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தியிருக்கும்.

அரசிடம் இருந்து இந்த நிறுவனங்கள் பெறவேண்டிய தொகையின் அளவையாவது கருத்தில் கொண்டு அந்த அளவுக்காவது இத்தகைய சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் என்ற வகைப் பாட்டில் இருந்து விலக்கி வைக்க முனையவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆயத்த ஆடைகள் துறைக்கு அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ள போதிலும் அந்தத் தொகை, குறிக்கோளின்படி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உண்மையில் பலன்களை அடிவரை கொண்டு சேர்க்கவில்லை.

எனவே சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தரவேண்டியுள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக அரசு விடுவிக்கவேண்டும் என்றும் ஜி.எஸ்.டி-ஐ ஆன்லைன் மூலமாக தாக்கல் செய்யும் எளிதான வழிமுறையை வகுக்குமாறும். ஆன்லைன் அல்லாத Manual நடைமுறைக்கு மாற்றாக அமைப்பு ரீதியிலான திருப்பியளிப்பு (ரீஃபண்ட்) நடைமுறையை வகுத்து சிரமங்களை அகற்றுமாறும், தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சிறு குறு நிறுவனங்களின் சிக்கலைக் கண்டறிந்து அதை உடனடியாக நிதியமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற சத்யபாமாவின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

அவருடைய கோரிக்கையை உடனே அரசு நிறைவேற்றவேண்டும்.

Leave a Response