மின்சாரக் கட்டண உயர்வுக்குக் காரணம் இந்த ஊழல்தான் – சீமான் குற்றச்சாட்டு

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழகத்தின் மின்னுற்பத்திக்காக வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியினை இறக்குமதி செய்ததில் மிகப்பெரும் ஊழல்கள் நடந்திருப்பது குறித்த ஆதாரங்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. இதுகுறித்த விவரங்களை ஆதாரத்தோடு வெளியிட்ட அறப்போர் இயக்கத்தினர் அதனை என்னிடம் அளித்து இவ்வூழலை உலகறியச் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.

ஏற்கனவே மின்னுற்பத்தியில் நடைபெறும் ஊழல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி மக்கள் மத்தியில் பரப்புரைகளை மேற்கொண்டு வரும்வேளையில் கிடைத்திருக்கிற இவ்வாதாரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முற்று முழுதும் ஊழல்மயமாகிப் போன தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டினையும், ஊழல் முறைகேட்டினையும் துகிலுரிப்பதாக உள்ளன.

இயற்கைக்கு எத்தகையத் தீங்கையும் விளைவிக்காது கடற்கரைக்கு அருகே காற்றாலை அமைப்பதன் மூலமாகவும், சூரிய ஒளியின் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிற வாய்ப்பிருக்கிறபோது அணு உலை வாயிலாகவும், நிலக்கரி இறக்குமதி வாயிலாகவும் மின்சாரத்தை ஏன் தயாரிக்க முற்பட வேண்டும் என்று மக்கள் மன்றத்தில் நாம் எழுப்பிய கேள்விக்கான விடையாக அணு உலையிலும், நிலக்கரி உற்பத்தியிலும் நடந்தேறியிருக்கிற மாபெரும் ஊழல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.

கமுதியில் 4,500 கோடி செலவில் அமைக்கப்படவிருக்கும் மின்னுற்பத்தி பூங்காவை அதானி என்கிற தனிப்பெரு முதலாளிக்குத் தாரைவார்ப்பதற்குப் பதிலாக அதனை அரசின் முதலீட்டின் வாயிலாகவோ, அரசைப் பங்குதாரராகக் கொண்ட தமிழ்த்தேசிய முதலாளிகள் கூட்டுத் திட்டத்தின் மூலமாகவோ தொடங்கலாம் என நாம் கூறிய ஆலோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டதன் அரசியல் இப்போதுதான் வெகுமக்களுக்குப் புலப்படத் தொடங்கியிருக்கிறது. உற்பத்தியில் கவனம் செலுத்தாது இறக்குமதியில் கவனம் செலுத்துவது ஊழலுக்குக் வழிவகுக்கும் என நாம் கூறியது உண்மை என்பது இப்போது அறுதியிட்டு சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தனியார் நிறுவனங்களிடமிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்ததில் கால் பங்கு அளவு கூடுதலான விலையில் இறக்குமதி செய்து பெரும் முறைகேட்டில் ஈடுபட்டு தமிழ்நாடு அரசுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த 5 ஆண்டுகளில் 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியானது 12,250 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதானி குழுமத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட நிலக்கரியின் அளவு மட்டும் 1.20 கோடி மெட்ரிக் டன்னாகும். 12,250 கோடி ரூபாய்க்குப் பெறப்பட்டிருக்கும் 2.44 கோடி டன் மெட்ரிக் நிலக்கரியானது உண்மையான மதிப்பிலிருந்து ஏறத்தாழ 3,000 கோடி வரை உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டிக்கிறது. இதன்மூலம் அரசுக்கு 1,730 கோடி ரூபாய் முதல் 3,025 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தப்பட்டு மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

இதுபோன்ற முறைகேடுகள்தான் தமிழக மின்சார வாரியத்தில் ஏற்படும் தொடர் இழப்புகளுக்குக் காரணமாக அமைந்திருந்திருக்கிறது என்பதும், இதனை ஈடுகட்டவே மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்கள் தலையில் சுமையினை ஏற்றி வைத்திருக்கும் கயமைத்தனத்தை ஆளும் அரசு செய்திருப்பதும் இதன்மூலம் அம்பலமாகியிருக்கிறது.

ரூபாய் 2 கோடிக்கு மேற்பட்ட ஒப்பந்தங்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் எனும் விதியிருக்கும்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக அவசரகதியாக 16 நாட்களிலேயே ஒப்பந்தத்தை இறுதிசெய்துள்ளனர். இதுவே இத்துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டிற்குச் சாட்சியாகும். இதனைப் போல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் நடந்தேறி வரும் ஊழல்களே தமிழக அரசினை 4 இலட்சம் கோடி வரை கடனுக்குள் தள்ளியிருக்கிறது என்பது வெளிப்படையாகிறது.

எனவே, மின்சாரத்துறையில் நடைபெற்ற இம்மாபெரும் ஊழல் குறித்து கண்டறிய மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தமிழக மின்சார வாரியத்தில் நடைபெறும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மையோடு நடைபெற வழிவகுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response