சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் லாவண்யா(வயது 26). மென்பொருள் பொறியாளரான இவர் சென்னை கேளம்பாக்கம் அருகில் நாவலூரில் உள்ள தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அருகில் உள்ள தாழம்பூரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில தினங்களாக கிண்டியில் உள்ள தங்கள் நிறுவனத்தின் கிளையில் வேலை பார்த்து வந்தார்.

பிப்ரவரி 13, 2018 ஆம் தேதி லாவண்யா, வேலை முடிந்து பெரும்பாக்கம் நுக்கம்பாளையத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டு, நள்ளிரவில் மொபட்டில் தாழம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

ஒட்டியம்பாக்கம் அரசன்கழனி-காரணை சாலையில் சென்றபோது, அங்கிருந்த கொள்ளைக் கும்பல் லாவண்யாவை வழிமறித்து அருகில் உள்ள முட்புதருக்குள் தூக்கிச்சென்று அவரது தலையில் கத்தியால் தாக்கியது. பின்னர் அவரிடம் இருந்த நகை, செல்போன்கள், மடிக்கணினி மற்றும் மொபட்டை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

முகம், கை, மார்பில் வெட்டுப்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய லாவண்யாவை காலையில் காவல்துறையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாட்கள் ஆபத்தான கட்டத்தில் இருந்த அவர் பின்னர் கண் விழித்தார்.

இந்த சம்பவத்தில் மூன்று கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்தனர். அவரது வாகனம், செல்போன், லேப்டாப் மீட்கப்பட்டது. இதனிடையே பெண் மென் பொறியாளர் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கண்டித்தன.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லாவண்யாவை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மென் பொறியாளர் லாவண்யா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குச் சென்றார். அவரை நலம் விசாரித்த ஸ்டாலினிடம் அன்றிரவு கொள்ளையர்களால் தாக்கப்பட்ட போது நடந்த சம்பவங்களையும் மருத்துவர்களின் சிறப்பான கவனிப்பையும் லாவண்யா கூறினார்.

இது குறித்து தனது முகநூலில் மு.க.ஸ்டாலின் பதிவில், ”கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி.பெண் ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்ப வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்னந்தனியாக கொள்ளையர்களுடன் அவர் தைரியமாக போராடியது என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

அதேபோல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நேரில் சந்தித்து லாவண்யாவிற்கு ஆறுதல் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response